நான் மட்டும் முதல்வர் அல்ல எல்லோருமே முதல்வர்தான்- அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நான் மட்டுமே முதல்வர் அல்ல அத்தனை பேருமே முதல்வர்தான் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: சாதாரண குக்கிராமத்தில் இருந்து வந்த என்னை முதல்வர் பதவியில் அமர வைத்தனர். அந்த நம்பிக்கையை நான்கு ஆண்டுகாலம் காப்பாற்றி பணியாற்றியுள்ளேன் என்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவிற்காக பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசிய பின்னர் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தன்னை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த தன்னை முதல்வராக அமரவைத்தனர்.
கடந்த 4 ஆண்டு காலம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு இனிவரும் காலங்களில் பணியாற்றுவேன். அடுத்து வரப்போகிற சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தொண்டர்கள் பூத் கமிட்டிகளில் களப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மூன்றாவது முறையாக வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, நம் மீதும் கட்சியின் மீதும் களங்கம் ஏற்படுத்த திமுக முயற்சி செய்வதாக கூறினார். எங்கள் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எங்கு வேண்டுமானாலும் மேடை போட்டு நேருக்கு நேர் விவாதிக்கலாம் என்று சவால் விட்டார்.
மெரீனா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் 30 நாட்களுக்குள் திறக்கப்படும் என்றும் கூறினார். 2021ஆம் ஆண்டில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை அரியணையில் அமர்த்துவோம் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications