"பிரக்ஞானந்தாவை சின்ன விவேகானந்தராக பார்க்கிறேன்" தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை: தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை சின்ன விவேகானந்தராக பார்ப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவதை எந்த காரணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கிறேன்.

இளம் வீரர், இளம் ஆளுநர்
மாணவர்கள் பலவீனமாக இருப்பது பாவம் என விவேகானந்தர் கூறி உள்ளார். நான் கடவுள் நம்பிக்கை உடையவள். அதேபோல் கடவுள் இல்லை என கூறுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் கடவுள் இல்லை என்பவர்களும் கோயிலுக்கு பின் வழியாக சென்று அவர்களும் சாமி கும்பிடுகின்றனர். பிரக்ஞானந்தா இளம் செஸ் வீரர், நான் இந்த நாட்டின் இளம் ஆளுநர் என்று தெரிவித்தார்.

தமிழிசை பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், பிரக்ஞானந்தாவை போல செஸ் விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும். செஸ் விளையாட்டு போட்டியில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் குழந்தைகள் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம்
ஓடி விளையாடு பாப்பா என பாரதியார் சொல்லியது போல எப்படி படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவு, ஊற்றல் கலையை எப்படி பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறோமோ, அதேபோல இன்றைக்கு பல சவால்களை சந்திக்கும் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அறநெறி வகுப்புகள்
பல இடங்களில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நமது நாட்டின் மிகப் பிரம்மாண்ட வரலாற்று கதைகள், செய்திகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. எனவே முந்தைய காலங்களில் எப்படி பள்ளிகளில் அறநெறி வகுப்புகள் என்று ஒரு வகுப்பு இருந்ததோ அதேபோல இப்போதும் இருக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications