வேலைவாய்ப்பு இல்லை.. டி சர்ட்டில் எழுதியபடி ராகுலுடன் இளைஞர்கள்! இந்த டி சர்ட்டை பாஜக எதிர்பார்க்கல
சென்னை: ‛பாரத் ஜோடோ யாத்திரை' எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல்காந்தி அணிந்திருக்கும் டீ சர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பாஜக விமர்சனம் செய்துள்ளது. இது விவாதப்பொருளாகி உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் பாஜகவுக்கு டீசர்ட் மூலம் வித்தியாசமான முறையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி சில திட்டங்களை முன்னெடுத்துள்ளார். முதற்கட்டமாக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் வரை ராகுல்காந்தி நடைப்பயணம் செய்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை என இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் இந்த நடைப்பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் துவங்கியது. இன்று 4வது நாளாக நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ்-பாஜக வார்த்தைப்போர்
இந்த நடைப்பயணத்தால் பாஜக, காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. ராகுல்காந்தியின் நடைப்பயணத்தால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியை அக்கட்சி நியமிக்க உள்ளது. அதற்காக தான் இப்படி நாடகமாடுகிறார்கள் என விமர்சனம் செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகிறது.

ராகுல் டீசர்ட் விலை ரூ.41,257
இந்த நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தி கடுமையாக பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியின் படத்தை பதிவிட்டது. அதில் ராகுல்காந்தி பர்பெரி எடீ கோர் போலோ என்ற டி ஷர்ட்டின் படத்தை இணைத்துள்ளது. இந்த டி ஷர்ட் படத்தில் ரூ.41,257 என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் 'பாரதமே பார்' என்ற எழுதப்பட்டு இருந்தது. இதன்மூலம் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் ராகுல்காந்தி ரூ.41,257 மதிப்பிலான டீசர்ட்டை அணிந்துள்ளதாக விமர்சித்துள்ளது. தற்போது இது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.

டீசர்ட் மூலம் காங்கிரஸ் பதிலடி
இந்நிலையில் தான் காங்கிரஸ் டீ சர்ட் விமர்சனத்துக்கு டீ சர்ட் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற இளைஞர்கள் வித்தியாசமான டீசர்ட்கள் அணிந்துள்ளனர். அந்த டீ சர்ட்டில் ‛வேலைக்காக நடக்கிறேன்' என பொருள்படி ஆங்கிலத்தில், ‛I am walking for job' என எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பான படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராகுல்காந்தி ட்வீட்
இதற்கிடைய தான் ராகுல்காந்தி அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்துள்ளார். அதில், ‛‛நமது இளைஞர்களில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்குமா?. அவர்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நாங்கள் வேலைக்காக நடக்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications