காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி
சென்னை: ''உங்களின் காலை தொட்டு கேட்டு கொள்கிறோம். எங்களை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள்'' என்று அதிமுகவில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிர்வாகி ஒருவர் தவெகவினரிடம் கெஞ்சிய சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதேபோல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவொற்றியூரில் உள்ள பெரியார் நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் பேசும்போது கூறியதாவது: ''நான் அதிமுகவில் ஒரு 50 ஆண்டுகளாக இருக்கிறேன். திருவொற்றியூர் நகர கழகத்தில் நகர செயலாளர், இளைஞர் செயலாளர் ஒரு 16 ஆண்டு காலம் இருந்துள்ளேன். அதன் பிறகு மாநகர போக்குவரத்து கழகத்தில்.. மாநில செயலாளராக இன்று வரை உள்ளேன். எங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்து கொள்ளுங்கள். எங்களின் பதவியை தூக்கியெறிந்து கொண்டு வருகிறோம்.
தவெகவில் இணைகிறோம் என்று 30 முக்கியஸ்தர்களின் பெயர்களை தான் நோட்டீஸில் போட்டுள்ளோம். ஆனால் 300 பேர் இணைகிறோம். அதிமுகவில் 50 ஆண்டு காலம் பயணித்து 25 ஆண்டு காலம் வட்டார செயலாளராக இருந்தவர் இன்று இணைகிறோம். வட்ட செயலாளர் பெயர் ஆனந்த் குமார். நான், அவரிடம் சொன்னேன். என்னப்பா.. தம்பி வட்ட செயலாளர் இங்க வாப்பா. இன்று தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லை. அதிமுக எல்லாம் இன்னும் 6 மாதம் இருக்கும். அதன்பிறகு அப்படியொரு கட்சியே இருக்காது என்றேன். என்னப்பா இப்படி சொல்ற.. என்ன ஐடியா என்று கேட்டார். ஒரு ஐடியாவும் இல்லை. விஜய் வந்துவிட்டார். இன்று முதல்வர்.. நாளை பிரதமர் ஆகிவிடுவார். உலகம் முழுவதும் அவரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பாகவே செங்கோட்டையன் சொன்னார். எம்எல்ஏ வீடு தேடி வந்து பார்த்தார். ஆனால் நாம கட்சியிலே சேரவில்லை. இதனால் குடும்பத்துடன் போய் பதிவு எல்லாம் வேண்டாம். உறுப்பினராக சேர்ந்து விடுவோம் என்று கூறி தான் தேதி கேட்டேன். தயவு செய்து எங்களை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களின் காலை தொட்டு கேட்டு கொள்கிறோம். எங்களை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு போட்டியாளர்களாக நாங்கள் வரவில்லை. பதவி கேட்டு வரவில்லை. ஆனால் நாங்கள் வந்ததற்கு எங்களை அங்கீகரிக்க வேண்டும். இனி அதிமுக ஒன்றும் இருக்காது. இனி 6 மாதம் எடப்பாடி இருப்பார். எடப்பாடி வேண்டாம் என்று கும்பிடுபோட்டு தவெகவிறகு வந்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications