டெல்லி சப்போர்ட் இல்லாம இப்படி பேச மாட்டாங்க? நான் மீண்டும் பாஜக தலைவராக வாய்ப்பு! தமிழிசை பரபரப்பு
சென்னை: நான் மீண்டும் தலைவராக வர வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படித்தான் பதவி வகிக்க வேண்டும் என்று இல்லை, என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பாஜக தமிழ்நாட்டில் வலிமை இல்லாமல் இருந்தாலும் கட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இருக்காது. அமைதியான மிடில் பென்ச் ஸ்டூண்ட் போலத்தான் பாஜக இருந்து கொண்டு இருந்தது. ஆனால் தமிழக பாஜக கடந்த 2 வருடங்களில் பல இடங்களில் வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அப்படி இருக்க அண்ணாமலை மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவை தூக்கி நிறுத்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமான பின்னடைவையே கொடுத்துள்ளன. அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பாஜக கூட்டணியில், ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.
தமிழிசை பேட்டி; இந்த நிலையில் பாஜகவின் செயல்பாடு பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தி இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியில், நான் மீண்டும் தலைவராக வர வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படித்தான் பதவி வகிக்க வேண்டும் என்று இல்லை.
என்னை பொறுத்தவரை ஆட்சி அமைக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும். நான் உச்சப்பட்ச பதவியை பார்த்துவிட்டு வந்துவிட்டேன். நான் பதவியில் இருந்துதான் பணியாற்ற வேண்டும் என்று இல்லை, என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழிசை கண்டிப்பாக டெல்லி மேலிட ஆதரவு இல்லாமல் இப்படி எல்லாம் பேச மாட்டார் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் சந்திப்பு: முன்னதாக தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து ஊடகங்களுக்கு மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று நாங்கள் எல்லாம் 2ம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.
அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications