கலாய்க்காதீங்க.. கஷ்டமா இருக்கு! அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்.. அதான் காலில் விழுந்தேன் -மாணவி விளக்கம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதாலேயே அவர் காலில் விழுந்ததாக மாணவி அகிலாண்டேஷ்வரி விளக்கமளித்து இருக்கிறார்.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப காலம் தாமாதம் செய்ததால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு முடிவுகள்
இந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

அண்ணாமலை காலில் விழுந்த மாணவி
இந்த நிலையில் நீட் தேர்வில் 104 மதிப்பெண் பெற்ற அகிலாண்டேஷ்வரி என்ற மாணவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மருத்துவப் படிப்பு செலவுக்கு உதவி கேட்க சென்றிருந்தார். அப்போது அவரை வாழ்த்திய அண்ணாமலை கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாணவி அண்ணாமலை காலில் விழுந்தார். அவரை அண்ணாமலை தூக்கி காலில் விழக்கூடாது என்றார்.

அமர் பிரசாத் ரெட்டி சிக்னல்
இந்த நிலையில் அண்ணாமலை காலில் மாணவி விழுவதற்கு முன்பாக அவரை பார்த்து பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, சைகை காட்டுகிறார். அதன் பின்னர் அவர் அண்ணாமலை காலில் விழுகிறார். இதனை வைத்து அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த சைகையால்தான் அண்ணாமலை காலில் மாணவி விழுந்தார் என்று சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்து பலரும் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர்.

செந்தில்குமார் ட்வீட்
இந்த நிலையில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், 104 மதிப்பெண் பெற்றவரால் மருத்துவக் கல்லூரியில் பணம் செலுத்தி சீட் பெறுவது மட்டுமே ஒரே வழி. ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.16-20 லட்சம். படிப்பை நிறைவு செய்ய ரூ.80 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். புத்தகங்கள், விடுதி கட்டணத்தையும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி 40% சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதற்காக பாஜக மசோதாவை நிறைவேற்றுமா என்று பார்ப்போம்." என்று பதிவிட்டுள்ளார்.

மாணவி விளக்கம்
இது தொடர்பாக அண்ணாமலை காலில் விழுந்த மாணவி அகிலாண்டேஷ்வரி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "கிராமத்தில் பிறந்த டீக்கடைக்காரர் மகள் நான் நீட் தேர்வில் வெற்றிபெற்றதை பார்த்து பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. சமூக வலைதளங்களில் கேலி செய்யாதீர்கள். மனது கஷ்டமாக இருக்கிறது. ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதாலே அவர் காலில் விழுந்தேன். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications