"லீவு கேட்டேன் தரல" வேலை போனாலும் பரவால்லன்னு வந்துட்டேன்.. விஜயின் தவெக மாநாட்டுக்கு வந்த இளைஞர்
விக்கிரவாண்டி: தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் லீவ் கேட்டதாகவும், லீவ் தராததால், வேலை போனாலும் பராவயில்லை என விக்கிரவாண்டிக்கு வந்து இருப்பதாகவும் விஜய் மாநாட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் மாநாட்டு திடலில் வைத்து கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத "தளபதி 69" படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க போவது இல்லை என்றும் முழு நேர அரசியலில் கால் பதிக்க இருப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தங்களின் இலக்கு எனவும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

விஜய் கட்சி: கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்சியின் கொள்கை உள்ளிட்டவற்றை முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறினார். இதனால், விஜய் கட்சியின் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிபார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் கட்சியின் மாநில மாநாடு இன்று ( அக்.27) நடைபெறும் என்று விஜய் அறிவித்தார்.
குவியும் தொண்டர்கள்: மாநாட்டிற்காக கடந்த சில வாரங்களாக இரவு பகலாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 85 ஏக்கர் பரப்பளவில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு கட்சியின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு அருகே 200 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இருந்தே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.
4 மணிக்கு வருகிறார் விஜய்: மாநாட்டில் 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்க உள்ளது. 4 மணியளவில் மாநட்டு திடலுக்கு வரும் விஜய், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தவெக கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்ற உள்ளார். 6 மணியளவில் விழாவில் விஜய் உரையாற்றுவார் எனத்தெரிகிறது. விஜய் மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் மட்டும் இன்றி கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
லீவு கேட்டேன் தரவில்லை: இதனிடையே தவெக மாநாட்டிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை என்றும் வேலை போனாலும் பரவாயில்லை எனக் கூறி வந்து இருப்பதாக கூறியுள்ளார். இளைஞர் கூறுகையில், "தவெக மாநாட்டிற்கு செல்ல வேண்டும் எனக்கூறி அலுவலகத்தில் விடுமறை கேட்டேன். ஆனால் நிறுவனத்தில் லீவ் தர மறுத்துவிட்டார்கள்.
மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என்று கூறினார்கள். நீக்கினால் நீக்கி கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேடேன்" என்று கூறினார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சையில், தவெக கட்சி மாநாட்டின் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய , தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், அண்மையில் ஒரு நிர்வாகி என்னைச் சந்தித்தார்..
புஸ்சி ஆனந்த் பேச்சு: மாநாடு நடக்கு நாளில் லீவ் கேட்டாராம். ஆனால், அவரது முதலாளி அக். 26, 27 எவ்வளவு முக்கியமான நாள்.. அப்போ போய் நீ லீவு கேட்டால் எப்படி என்று மறுத்துள்ளாராம். அதற்கு நம்ம கட்சி நிர்வாகி, நான் 18 வருஷமா உங்க கிட்ட வேலையில் இருக்கேன்.. 2 நாள் தானே லீவ் கேட்கிறேன் என முதலாளியிடம் சொல்லியுள்ளார். அதற்கு அந்த முதலாளி லீவ் எடுத்தால் உனக்கு போனஸ் தர மாட்டேன்.. வேலையை விட்டும் தூக்கிவிடுவேன் எனக் கூறியிருக்கிறார்.
அதுக்கு நம்ம நிர்வாகி, போனஸ் கொடுத்தா கொடுங்கள்.. வேலையை விட்டு தூக்குவது என்றால் கூட ஓகே.. என் தலைவனை நான் பார்க்க போகணும். உங்க வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். இதுபோல உண்மையான தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி நமது தமிழக வெற்றிக் கழகம் தான்"என்று பேசியிருந்தார். புஸ்சி ஆனந்தின் பேச்சு நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications