அந்த வலி எனக்கு தெரியும்.. என் அப்பாவை இழந்தது சாலை விபத்தில்தான்.. உருக்கமாகப் பேசிய சுதாகர்!
சென்னை: சாலை விபத்தில் உயிரை இழப்பதன் வலி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் என்னுடைய தந்தையை இழந்தது சாலை விபத்தில்தான், எல்லோரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்துவதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை விபத்துகளில் உயிர் காக்கும் கருவியாகச் செயல்படும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்வது குறித்து சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தலைகவசம் அணிவதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, "நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளால் கடந்த வாரம் முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் நேற்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.
"நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், "ஹெல்மெட் அணியாமல் தான் தற்போது அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்த தான் நம்ம ஹெல்மெட் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாம் எப்படி சட்டை போடுகிறோமோ, அது போலத்தான் ஹெல்மெட் போடுவதும். நிறைய பேர் தற்போது ஹெல்மெட் போட ஆரம்பித்து விட்டனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை, உங்கள் பாதுகாப்புக்காக அணிய வேண்டும். இது நம்ம உயிர், நம்ம ஹெல்மெட். எங்கள் கனவு சென்னையில் விபத்து விகிதத்தை வெகுவாகக் குறைக்கவேண்டும் என்பது தான்.
பல இரு சக்கர விபத்துகளின்போது, எல்லாரும் கூறுவது ஹெல்மெட் போட்டு இருக்கலாம், ஹெல்மெட் பிளாக் மாட்டி இருக்கலாம் எனக் கூறுவார்கள். இவ்வளவு ஏன், என் அப்பாவை இழந்தது கூட விபத்தில் தான். அதனால் உயிரின் மதிப்பு எனக்குத் தெரியும். அப்போது தான் எனக்கும் ஹெல்மெட் முக்கியத்துவம் புரிந்தது." என உருக்கமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications