ஆவணங்கள் பறிமுதல்.. அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சிக்கியது என்னென்ன? ED தந்த முக்கிய விளக்கம்
சென்னை: அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். திண்டுக்கல் மற்றும் சென்னையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் பின்னணி மற்றும் பறிமுதல் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ பெரியசாமி. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவான இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

ஐ பெரியசாமியின் மகன் பெயர் செந்தில் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக உள்ளார். அதுமட்டுமின்றி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
அமலாக்கத்துறை சோதனை
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஐ பெரியசாமி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ பெரியசாமியின் இல்லம், திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள இல்லம், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள மகன் செந்தில்குமாரின் வீடு, சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில் பெரியசாமி மற்றும் செந்தில் குமாருக்கு சொந்தமான அறைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திமுக கடும் எதிர்ப்பு
இந்த சோதனையை திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். மேலும் திண்டுக்கல்லில் ஐ பெரியசாமியின் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இருப்பினும் அமலாக்கத்துறையினர் கண்டுக்கொள்ளவில்லை. சோதனையை வெற்றிகரமாக முடித்து சூட்கேஸில் சிலவற்றை எடுத்து சென்றனர்.இந்நிலையில் தான் ஐ பெரியசாமி வீட்டில் கிடைத்தது என்ன? என்பது பற்றி அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விளக்கம்
இதுதொடர்பாக அமலாக்கத்துறை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழக பஞ்சாயத்து ராஜ் மற்றுமு் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான ஐபி செந்தில் குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 16/08/2025 அன்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திண்டுக்கல் மற்றும் சென்னையில் பல இடங்களில் நடந்தது.
சிக்கியது என்னென்ன?
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விஷயத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் சொத்து ஆவணங்கள், முதலீடு சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications