27 முறை ஜெயிலுக்கு போனேன்.. ஆனால் திமுக என்னை வெளியேற்றியது! கலங்கிப் போய் வைகோ சொன்ன ஃப்ளாஷ்பேக்!
சென்னை: எந்த இயக்கத்திற்காக உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. 30ஆண்டு காலம் திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன் திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் உருக்கமுடன் பேசியுள்ளார்.
அறிஞர் அண்ணா, திமுகவை ஆரம்பித்தபோது கட்சியில் சேர்ந்தவர் தற்போது மதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ. கருணாநிதிக்கு நெருக்கமான போர்ப் படை தளபதிகளில் ஒருவராக பார்க்கப்பட்ட அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை அடுத்து மதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார் வைகோ. வைகோ கட்சியை விட்டு விலக்கப்பட்டபோது பல தொண்டர்கள் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். பல மாவட்ட செயலாளர்கள் அவருடன் பயணித்தனர்.
அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வைகோ அதன் பிறகு தனது அரசியல் நிலைப்பாடுகளால் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற முடியவில்லை. இந்த நிலையில் தான் கட்சியை விட்டு விலக்கப்பட்டது குறித்தும், கலைஞர் கருணாநிதி உடனான தனது நெருக்கம் குறித்தும் உருக்கமுடன் பேசியுள்ளார் வைகோ. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய அவர்," ஈழத்திற்கு சென்று தேசிய தலைவரை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் அவர் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார்.
அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் வருவேனா என கேள்வி இருந்ததால் இதை செய்தேன். ஆனால், என் மனைவியிடம் திமுக வெற்றி பெற்றதற்கு வாங்கி தந்தேன் என கூறினேன். யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதி விட்டு சென்றேன்.
ஈழத்தில் இருந்த நேரத்தில் வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும் திமுகவிற்கு எந்த சம்மதமும் இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதனை தெரிந்துகொண்ட தேசிய தலைவர், உடனடியாக நீங்கள் தமிழ்நாடு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான் செல்ல மாட்டேன் என கூறினேன். இருப்பினும் அவர் வலியுறுத்தி கூறியதால் நான் செல்கிறேன் என கூறினேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு புறப்படும் முன் எனக்கு புட்டு, மீன், இறால் என விருந்து வைத்தார்.
ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் என்னை சித்திரவதை செய்வார்கள் எனவே எனக்கும் ஒரு விஷ குப்பி வேண்டும் என்று கேட்டேன். இதையடுத்து அவர் தனது கழுத்தில் இருந்த ஒரு குப்பியை எனக்கு வழங்கினார். இப்போதும் அந்த குப்பி பத்திரமாக என்னிடம் உள்ளது. புறப்பட்டு வந்த நேரத்தில் காட்டில் கடும் பசியாக இருந்த நேரத்தில் மான் கறி உள்ளது என கூறியதும் மகிழ்ச்சியுடன் எழுந்து சாப்பிட்டேன். அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்.
எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. 30ஆண்டு காலம் திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன் திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன். ஆனாலும், நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். 1964ல் அண்ணாவின் முன்னிலையில் தான் அங்கீகாரம் பெற்றேன். மதிமுகவில் 30 ஆண்டுகளாக அரசியல் பணி செய்து வருகிறேன். எனது வாழ்நாளில் 60ஆண்டுகள் பொதுவாழ்விலேயே கடந்துவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications