பாரதியாரே அப்படி தானே கூறினார்.. பாரத தேசம் என்று அழைத்தால் மகிழ்ச்சி.. தமிழிசை கருத்து
சென்னை: பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்றும், குற்றம் சாட்டுவது காங்கிரஸ் கட்சியினரின் வாடிக்கையான ஒன்று தான் என்றும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜி20 மாநாடு நடப்பதையொட்டி, டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டையொட்டி டெல்லி அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளன. மேலும் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருகை தர உள்ள விருந்தினர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இந்த விருந்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ள நிலையில் நாட்டினை பெயரையே பாரத் என மாற்ற முயற்சி செய்யப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழிசை சவுந்தரராஜன், பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- பாரத தேசம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நம் நாட்டின் பெருமை. முதலில் பாரத தேசம் என்று தான் நாம் அழைத்துக்கொண்டிருந்தோம். நமது பிரதமர் மோடி ஆங்கிலேயர்களின் தாக்கம் எங்கு எல்லாம் இருக்கிறதோ.. அதில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
"பாரத தேசம் என்று தோள்கொட்டுவோம்" என்று தானே பாரதியார் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்தியா கூட்டணி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியிருப்பதால் தான் பாஜக தற்போது பாரத் என்று பெயர் வைக்கின்றனர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், குற்றம் சாட்டுவது காங்கிரஸ் கட்சியினரின் வாடிக்கையான ஒன்று தான். பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications