மெரினாவை தேர்வு செய்தது ஏன்? வானத்தில் பறந்த போர் விமானங்களின் பெயர் என்ன? அதன் பலம் என்ன?
சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியில் எத்தனை வகையான விமானங்கள் பங்கேற்றன? இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான காரணம் என்ன? எதற்காக மக்கள் முன்னிலையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது?
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச அணிவகுப்பு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் பங்கேற்றதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் மெரினா முழுக்க மனித தலைகளால் நிரம்பி வழிந்தது. இதனால் கிண்டி மற்றும் வேளச்சேரி எனப் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயிலும் அலைமோதியது. ஆகவே அதற்காக மெட்ரோ ரயில்களின் நேரம் குறைக்கப்பட்டு அதிக முறை இயக்கப்பட்டன. இந்த சாகச நிகழ்ச்சியைக் காணக் குவிந்தவர்களில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 5 பேர் பலியானதாகச் சொல்லப்படுகிறது.
இந்த உயிரிழப்பு பற்றி விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்த ஊயிரிழப்பு வருத்தத்திற்கு உரியது. அதற்காக அனுதாபம் கொள்கிறோம். இதை வைத்து யாரும் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனல் காற்றும் தாங்க முடியாத கோடை வெயிலின் தாக்கமும் உள்ளபோது ஏன் இந்த சாகச நிகழ்ச்சி தேவைதானா என சிலர் புரியாமல் பேசுகின்றனர். இது எதற்காகச் சென்னை மெரினாவில் நடைபெற்றது? அதற்கான காரணம் என்ன? அதில் என்ன வகையான விமானங்கள் பங்கேற்றன? இதைப்போன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் மாதேஷ்வரன்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி மிகப்பெரிய விமானப் பேரணி நடைபெறும். அதில் விதவிதமான விமானங்களின் அணி வகுப்பு இருக்கும். சாகசங்கள் நிறைய நடைபெறும். முன்பு எல்லாம் டெல்லியில்தான் இந்த மாதிரியான விமானப் படை சாகசங்கள் நடைபெறும். அந்த அணிவகுப்பு மூலம் விமானப் படையைப் பற்றி மக்களிடம் அதிக அளவு விழிப்புணர்வு இல்லை. எனவே அதை அதிகப்படுத்தப்பட்ட வேண்டும் என ஒரு முடிவை எடுத்தார்கள். ஆகவே 2015இல் முதல் பல மாநிலங்களில் விமானப் படை சாகச நிகழ்ச்சிகளைச் செய்ய அரசு திட்டம் வகுத்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான் 92ஆம் ஆண்டு விமானப் படை தினத்தைச் சென்னையில் அரசு நேற்று மெரினாவில் நடத்தி முடித்துள்ளது. உலகின் நான்காவது பெரிய விமானப்படை என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அதன் சக்தி என்ன? திறமை என்ன என்பதை மக்கள் கண்கூடாகப் பார்த்து உணர்ந்துள்ளனர். இதில் அனைத்து விதமான விமானங்களும் பங்கேற்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானமும் பங்கேற்றுள்ளது. ரஃபேல் மற்றும் Su-30 விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்த வகை விமானம் கிட்டத்தட்ட இந்தியப் படையில் 300 விமானங்கள் இருக்கின்றன. MiG-29, MiG-27 என்ற விமானமும் பங்கேற்றுள்ளன. இப்படி மொத்தம் 72 போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.

பொதுவாக ராணுவ விமானங்களைப் பொறுத்தவரை அதில் 2 விமானிகள் இருப்பார்கள். அதை தாண்டி நேவிக்கேட்டர்ஸ் இருப்பார்கள். சில இன்ஜினியர்கள் இருப்பார்கள். மக்கள் பயணிக்கும் விமானத்தைவிட ராணுவ விமானங்கள் சக்தி வாய்ந்தவை. இந்த விமான சாகசம் மூலம் நம் படையின் திறன் எப்படி உள்ளது? ஒருங்கிணைந்து எப்படி அவர்கள் செயல்படுவார்கள்.
போர்க் காலத்தில் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும்? வியூகங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் இந்த விமானப் படை பேரணியில் நடைமுறை செய்து பார்ப்பார்கள். அதன் மூலம் நம் விமானங்களின் செயல்பாடும் பரிசோதிக்கப்படும். இதனை உலக நாடுகள் காண வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். ஆக, இவை எல்லாம் போர் சூழலை எப்படி நம் நாடு கையாளும் என்பதற்கான அறிகுறிகள். எனவே இது முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு.
ஒரு விமானப் படை விமானி என்பவர் பயிற்சி பெற்ற பிறகு அத்துடன் இருக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தப் பயிற்சிதான் பல பாடங்களைக் கற்பிக்கும். ஒரு போர் வந்த பிறகு விமானத்தில் ஏறி சண்டை போடலாம் எனக் காத்திருக்க முடியாது. தினம் தினம் அதற்காகப் பயிற்சியை கற்றாக வேண்டும். ஏர்லைன்ஸ் விமானிகள் போர் விமானத்தை ஓட்ட முடியாது.
ஏனெனில் அதன் பயிற்சி என்பது வேறு. அதில் சாகசங்கள், அந்நிய நாட்டு விமானத்தை வீழ்த்தும் கலை எல்லாம் கற்றுத் தர மாட்டார்கள். எனவே ராணுவ விமானங்களை இயக்குவது என்பது சாகசம் கற்றுச் செய்யும் வேலை. இந்த விமானிகளை ஏர்லைன்ஸ் விமானிகளோடு ஒப்பிடவே கூடாது. இரண்டும் வேறு வேறு" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாளை தாம்பரத்தில் முறையாகத் தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அணிவகுப்பு நடைபெறும். புதிய ராணுவ அதிகாரி இப்போதுதான் ஏ.பி.சிங் பொறுப்பேற்றிருக்கிறார். இவர் தான் தாம்பரம் அணிவகுப்பை ரிவீச் செய்யவார். அதற்கு முன்னதாக நேற்று மக்களுக்காக ஒரு அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதிகாரப்பூர்வமான அணிவகுப்பு என்பது நாளை நடைபெற உள்ளதுதான்" என்று சொல்லும் இவர் கடந்த 2014இல் விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications