“முட்டாள்கள்”.. திருப்பரங்குன்றத்தில் திமுகவை திட்டிய பாஜக அமைச்சர்.. உடனே வந்த கி.வீரமணி காட்டம்
சென்னை: மதுரைக்கு வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுப்போர் முட்டாள்கள்'' என்று விமர்சித்திருந்த நிலையில், இதற்கு தமிழகத்தின் மூத்த தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.. கி.வீரமணி வெளியிட்டுள்ள இந்த கருத்து பாஜகவின் அரசியல் கட்சிகளின் கவனம் பெற்றுள்ளது..!!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

அப்போது திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் கருத்து தெரிவித்தார். "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றாமல் இருப்பது முட்டாள்தனம். இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதைத் தடுக்க முயல்பவர்கள் முட்டாள்கள்..
திருப்பரங்குன்றம் தீபம்
இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது.. தமிழிலிருந்து திருக்குறளை எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதுபோலவே திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதைத் தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதையடுதது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி பதிலடி தந்திருந்தார்..
தமிழ்நாட்டு பிள்ளைகள்
அதில், "தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது" என்று விமர்சித்திருந்தார்..
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபத்தூண் - வாக்கு வங்கி
மதுரைக்கு வந்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், ''திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுப்போர் முட்டாள்கள்'' என்று சற்றும்
பொறுப்பற்ற முறையிலும், பண்பற்ற தன்மையிலும் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே மதக் கலவரத்தைத் தூண்டி, வரவிருக்கும் தேர்தலில் 'வாக்கு வங்கி'யாக அதனை மாற்றிவிடலாம் என்று கனவு காண்பவர்களுக்கு பதில் சொல்வதற்கு ஒரு சாதாரண பகுத்தறிவுக் குடிமகனே போதும்.
முட்டாள்கள் - பாஜக அரசு
வழக்கமாக நடைபெற்றுவரும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தடை செய்ததா தமிழ்நாடு அரசு?. பக்தர்கள் வசதிக்காக - வழிபாட்டிற்காக, கோவில் சம்பிரதாயப்படி ''தீபம் ஏற்றவேண்டிய நாளில், முறையாக அங்கே ஏற்றிவிட்ட நிகழ்ச்சிக்கு ஏதாவது தடை - இடையூறு ஏற்பட்டதா? அதற்கு அரசால் ஏதாவது தடை விதிக்கப்பட்டதா?
நாவடக்கமின்றி பேசும் இப்படிப்பட்ட ஆணவப் பேச்சுக்கு, நீங்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும் என்பதை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் புரிய வைக்கும்" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications