மூன்று கட்சி தாவிய அப்பாவு.. வரும் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டால் திமுகவில் நீடிப்பாரா? இன்பதுரை கேள்வி
சென்னை: "பாஜகவுடன் இபிஎஸ் கடைசி வரை கூட்டணியில் இருப்பது கேள்விக்குறியே" என்று சபாநாயகர் அப்பாவி கூறியதற்கு அதிமுகவின் இன்பதுரை பதிலளித்துள்ளார். ‛‛திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நல்ல முடிவை எடப்பாடி பழனிச்சாமி எப்போதோ எடுத்துவிட்டார். இதுவரை மூன்று கட்சி தாவியுள்ள மு.அப்பாவு இம்முறை சீட் கிடைக்காவிட்டால் திமுகவில் தொடர்வாரா? அல்லது முழுக்கு போடுவாரா? என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று இன்பதுரை கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்ட தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

"மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. பொத்தாம் பொதுவாக ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடியை தமிழகத்துக்கு தந்ததோம் என்று மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்துக்குகு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்ல மாட்டார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை கடந்த 4 ஆண்டுகளாக தரவில்லை. குறிப்பாக கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஒருபோதும் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் சொல்கிறார். மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டும் என அனைத்து கிராமத்தில் உள்ள பெண்களும் நினைக்கிறார்கள். 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தமிழக முதல்வர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டுதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்பதை அமித் ஷா சொன்னார். பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து வர செய்தும் அதையே தான் சொன்னார். எதிர்க்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்க கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவிடம் ஒரு முடிவு தெளிவாக இருக்காது. எதை கேட்டாலும் டெல்லியில் முடிவு செய்வார்கள் என்று தான் சொல்லிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை பதிலளித்துள்ளார். இதுபற்றி இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நல்ல முடிவை எடப்பாடி பழனிச்சாமி எப்போதோ எடுத்துவிட்டார்! இதுவரை மூன்று கட்சி தாவியுள்ள மு.அப்பாவு இம்முறை சீட் கிடைக்காவிட்டால் திமுகவில் தொடர்வாரா? அல்லது முழுக்கு போடுவாரா? என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு இன்பதுரை தோல்வியடைந்தார். அப்பாவு 82,331 ஓட்டுகள் பெற்ற நிலையில் இன்பதுரை 76,406 ஓட்டுகள் பெற்று 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதற்கு முன்பாக 2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை வீழ்த்தி இன்பதுரை வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் இன்பதுரை 69,590 ஓட்டு பெற்ற நிலையில் அப்பாவு 69, 541 ஓட்டுகள் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ராதாபுரம் சட்டசபை தொகுதியிலும் மீண்டும் திமுக சார்பில் அப்பாவு களமிறங்கலாம். அதேபோல் அதிமுக சார்பில் இன்பதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ‛‛இதுவரை மூன்று கட்சி தாவியுள்ள மு.அப்பாவு இம்முறை சீட் கிடைக்காவிட்டால் திமுகவில் தொடர்வாரா? அல்லது முழுக்கு போடுவாரா?'' என்று இன்பதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications