அஸ்திவாரமே "கிறிஸ்தவர்கள்"தான்.. சபாநாயகர் அப்பாவு அதிரடி.. இந்து விரோத அரசு என கொந்தளித்த பாஜக!
கிறிஸ்தவர்களை உயர்த்தி அப்பாவு பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன
சென்னை: கிறிஸ்தவர்களை நீக்கிவிட்டால், தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பதே இல்லை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதகர்கள்தான்... சமூகநீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்புதான்.. நீங்கள்தான் அஸ்திவார கற்கள்.. உங்களுக்கு மேல் கட்டப்பட்டதுதான் இந்த தமிழகம்" என்று சபாநாயகர் அப்பாவு பேசிய பேச்சு சர்ச்சையை உண்டு பண்ணி வருகிறது.. இதற்கு பாஜக கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றன.. குறிப்பாக, கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பேசி வருவதாக அப்பாவு மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம், நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.

கல்வி நிலையங்கள்
அப்போது அவர் பேசியபோது, தமிழ்நாட்டில் பட்டதாரி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.. இந்த சமூதாயத்தில் திராவிட சித்தாந்தத்தை ஊட்டி, சமூக நீதியை நிலைநாட்டி அனைவரும் கல்வி பயிலலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என்று அப்பாவு பேசியிருந்தார்.. இதற்கு அப்போதே பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.. இப்போது மீண்டும் அதுபோலவே அப்பாவு பேசியுள்ளார்.

கிறிஸ்தவர்கள்
செயின்ட்பால் சர்ச் நிகழ்வு ஒன்றில் அப்பாவு கலந்து கொண்டார்.. அப்போது, அவர் பேசியதாவது: "அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அவர்கள் மட்டும் இல்லை என்றால், நாம் திரும்பி பார்ப்போம், பீகார் போல் தமிழ்நாடும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி உண்மையை சொல்ல வேண்டுமென்றால், என்னை உருவாக்கி இந்த இடத்துக்கு கொண்டு வந்தது கத்தோலிக்க, தந்தையர்கள், கத்தோலிக்க சகோதரிகள்.. நான் அடிக்கடி சொல்வேன், இந்த அரசு உங்கள் அரசு, உங்களால் உருவாக்கப்பட்ட அரசு, நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கிய அரசு.. நீங்கள் யாரிடமும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை..

மறுதலிக்க மாட்டார்
நீங்களே முடிவெடுத்து, உங்கள் பிரச்சனைகள் என்னவென்பதை எண்ணி, நம்முடைய முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. நிச்சயமாக மறுக்க மாட்டார்.. மறுதலிக்க மாட்டார்.. காரணம், உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.. ஆகவே, உங்கள் அரசு, உங்கள் முதல்வர், நீங்கள் சென்று தைரியமாக உங்கள் கோரிக்கைகளை வைத்து காலம் தாழ்த்தாமல், அதற்கு வேண்டியவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்..

பீட்டர் அல்போன்ஸ்
உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்.. தம்பி இனிகோ இருக்கின்றான்.. அருமை அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார்.. உங்களை நீக்கிவிட்டால், தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பதே இல்லை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதகர்கள்.. சமூகநீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்புதான்.. நீங்கள்தான் அஸ்திவார கற்கள்.. உங்களுக்கு மேல் கட்டப்பட்டதுதான் இந்த தமிழகம்" என்றார்.

அப்பாவு
அப்பாவு பேசியதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பி உள்ளது.. தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதி அப்பாவு பேச்சை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ""திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசுக்கு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிருஸ்தவ மதம் தான், கிருஸ்த்துவ பாதிரியார்கள் தான் , உங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு என்று முதல்வருக்கு தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிருஸ்துவ மத போதகர்கள் தான். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இன்றைய தமிழகம்." - சபாநாயகர் அப்பாவு..

கிறிஸ்தவர்கள்
கிருஸ்துவ மத போதகர்கள் மதமாற்றத்திற்கு காரணமானவர்கள் என்பதால் தமிழகம் அவர்களின் மேல் கட்டப்பட்டது என்கிறாரோ? மதவாதம் இதுவன்றோ? மத சார்பற்ற அரசு என்று அழைத்துக்கொள்ளக்கூடிய தகுதியை தி மு க அரசு இழந்து விட்டது. ஹிந்து விரோத அரசு என்ற விமர்சனம் உறுதியாகிறது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவும், எதிர்ப்புமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இயேசுநாதர்
சபாநாயகர் என்பவர் அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டியவர்.. அவரே இப்படி எப்படி பேசலாம்? பாராளுமன்ற சபாநாயகர் ஒருதலை பட்சமாக பேசினால் மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்... இப்படித்தான், கடந்த 2010-ல் அப்பாவு திமுக எம்எல்ஏவாக இருந்தபோது, நெல்லையில் ஒரு பேட்டி தந்தார்.. அப்போது, "இயேசு நாதரும் முதல்வர் கருணாநிதியும் ஒன்றுதான். எனவே, இயேசுவின் பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் போல, நாம் முதல்வர் கருணாநிதியின் பெற்றோருக்கும் அளிக்க முன்வர வேண்டும்" என்று பேசியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications