இது நடந்தால் 2024ல் பாஜக தோற்கும்! ஸ்டாலினோடு கெஜ்ரிவால் சொன்ன அந்த வார்த்தை! அப்போ கன்பார்மா?
சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஸ்டாலின் முன்னியைில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய தகவல் என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைய வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அனுமதி இருப்பதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கு திருத்தத்துக்கு கட்சிகள் ஆதரவு வழங்க கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.
அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் சேர்ந்து சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது சட்ட திருத்தத்துக்கு ஆதரவு வழங்காமல் எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் கூறினார். அதற்கு ஸ்டாலினும், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த வேளையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ‛‛டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், மாற்றம் தொடர்பான வழக்கில் 8 ஆண்டு போராட்டத்துக்கு பின் உச்ச நீதிமன்றம் டெல்லி மக்களுக்கான தீர்ப்பு வழங்கியது. அதிகாரிகள் மாற்றம், நியமனத்துக்கு டெல்லி அரசுக்கு முழு உரிமை வழங்கியது. ஆனால் மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து நீதிமன்ற தீர்ப்பை மீறுகிறது.
இதற்கு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்க கூடாது என ஸ்டாலினிடம் கூறினேன். அவர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். இந்த சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறேன்.
கடந்த 2 வாரமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறேன். இதன்மூலம் எனது நம்பிக்கை வளர்ந்துள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்து ஓரணியாக வந்து ஆதரவு தர வேண்டும். லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு நிறைவேறிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் மசோதாவை ராஜ்யசபாவில் தோற்கடிக்க வேண்டும் என தலைவர்களை சந்தித்து வருகிறேன்.
இந்த மசோதா ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டால் அது பாஜவுக்கு மிகப்பெரிய மெசேஜாக அமையும். மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பிரதமர் மோடியின் ஆட்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கிடைக்கும். இந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆதரவு அளிக்கும். ஏனென்றால் இந்த மசோதாவை ஆதரிக்க காங்கிரஸ் கட்சிக்கு எந்த காரணமும் இல்லை. அதோடு இது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்றாக உள்ளது'' என்றார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூறி வருகிறார். ஆனால் ஆம்ஆத்மி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சிகள் இன்னும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கவில்லை. இந்நிலையில் தான் ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி கூறியுள்ளார்.
மேலும் பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் தடுக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை அவர் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்பட்சத்தில் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக வாய்ப்பு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
