மானியத்தை குறைச்சிட்டாங்க.. உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்பு.. ப. சிதம்பரம் வார்னிங்!
சென்னை: பட்ஜெட்டில் உணவுப்பொருள், உரங்களுக்கான மானியத்தை வெட்டியிருக்கிறார்கள். இதன் விளைவு என்னவென்றால் உணவுப் பொருள்களின் விலை கூடப் போகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பட்ஜெட்டில் உணவுப்பொருட்கள், உரங்களின் மானியத்தை குறைத்துள்ளதால் வரும் காலங்களில் உணவுப்பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் என்று விமர்சித்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது:-

பொருளாதார தேக்க நிலை
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் கடந்த 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். உலக நாடுகளே இந்திய பட்ஜெட்டை உற்று கவனித்தது. உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் கச்சா எண்ணெய்களின் விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை பற்றி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பொருளாதார தேக்க நிலை உள்ளது.

7 சதவீத்துக்கும் குறைவாகவே வருகிறது
உலக நாடுகளின் வர்த்தகம் சுருங்கியிருக்கிறது. உலக வர்த்தகம் குறைந்து வருவதாக பிற நாடுகளின் நிதி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். ஆனால் நமது நிதி அமைச்சரோ எதிர்மறையாக பேசி வருகிறார். பட்ஜெட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சி 7% அதிகமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார் ஆனால், முதல் காலாண்டு தொடங்கி, நான்கு காலாண்டுகளிலும் சராசரியான வளர்ச்சி 7 சதவீத்துக்கும் குறைவாகவே வருகிறது. இதனால், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்.

10 ஆயிரம் கோடி டாலர் பற்றாக்குறை
இந்தியா - சீனா இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் 10 ஆயிரம் கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே மாதிரிதான் பிற நாடுகளின் வர்த்தகமும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இந்தியாவில் தொழில் தொடங்க யாரும் அதிக அளவில் முன்வரவில்லை. அரசு முதலீடு மட்டுமே நாட்டை வழிநடத்துகிறது. ஆனால், இந்த அரசின் முதலீடு அறிவிப்பும் செயல்பாடும் வித்தியாசப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களால் ஏற்படும் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது.

ஜி.எஸ்.டியை அவசரமாக அமல்படுத்தினர்
ஆனால் சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் சிறப்பு கவனம் எதுவும் செலுத்தபப்டவில்லை. 2005- ஆம் ஆண்டு வாட் வரி அமல்படுத்தப்பட்டது. ஒருவருக்கும் பாதிப்பு வரவிலை. அதன்பிறகு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கான வரைவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜி.எஸ்.டியை அவசர அவசரமாக அமல்படுத்தினார்கள். அப்போது அதில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டினேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஐந்து அரை ஆண்டுகளில் பல அறிவிப்புகள், எதிர்ப்புகள், கோர்ட் வழக்குகளை அரசு எதிர்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டியால் சிறு குறு தொழில்கள் நசுக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உணவுப்பொருள் விலை உயர்வு
பட்ஜெட்டில் உணவுப்பொருள், உரங்களுக்கான மானியத்தை வெட்டியிருக்கிறார்கள். இதன் விளைவு என்னவென்றால் உணவுப் பொருள்களின் விலை கூடப் போகிறது. உரங்களின் விலை கூடப்போகிறது. உணவுப்பொருட்களுக்கும் உரங்களுக்கும் மானியம் தேவை. மானியங்கள் வெட்டப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனால், வருங்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications