மத்திய அரசு ஊழியர்கள் ரூ.80 ஆயிரம் சம்பளம் வாங்கினால், 40 ஆயிரம் ஓய்வூதியம்.. ரயில்வே அதிகாரி தகவல்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், உறுதி செய்யப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை மற்றும் மொத்த தொகை செலுத்தும் பலன்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்க போகிறது. அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தில் சேர தெற்கு ரயில்வே ஊழியர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த 24-ந்தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாகும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.

தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர தெற்கு ரயில்வே ஊழியர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபற்றி தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பணியாளர் நலப்பிரிவு அதிகாரி ஹரிகிருஷ்ணன், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 24-ந்தேதி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அனுமதித்தது. இந்த திட்டம் வருகிற 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தால் ரயில்வே பணியாளர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், உறுதி செய்யப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம், கருணைத்தொகை மற்றும் மொத்த தொகை செலுத்தும் பலன்களும் கிடைக்க போகிறது. இந்த புதிய ஒருங்கிணைத்த ஓய்வூதிய திட்டத்தில் சேர தெற்கு ரயில்வேயில் உள்ள 81 ஆயிரத்து 311 பணியாளர்களில், 62 ஆயிரத்து 706 பேர் தகுதி உடையவர்கள் ஆவார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத் தொகை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு, அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.
இதில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பின், அவர் ஓய்வு பெரும் முன் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத் தொகையில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத் தொகையில், ஓய்வூதியப் பணப் பலனுக்காக இதுவரை 14 சதவிகிதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத் தொகையில் 18.5 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல சலுகைகள் இருப்பதால் இதில் இணைய பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறோம். தற்போது மத்திய அரசு ஊழியர் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்து ரூ.80 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்றால், ஓய்வு பெற்றால் ரூ.40 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவார்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications