ஐஐடி பட்டதாரி டூ அரசியல்வாதி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் சம்பத் பின்னணி தெரியுமா?
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் ஒரு ஐஐடி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முழுக்க முழுக்க சென்னையில் வசித்து வரும் சஞ்சய் சம்பத், சொந்தமாக தொழில்களை கவனித்து வருகிறார்.
பள்ளிப்பருவம் முதலே அறிவுக்கூர்மையாக செயல்படக் கூடிய சஞ்சய் சம்பத், தேர்தல் காலங்களில் தனது தந்தைக்கும், அண்ணன் திருமகன் ஈவெராவுக்கும் உதவிக்கரமாக செயல்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.

யார் இந்த சஞ்சய் சம்பத்?
யார் இந்த சஞ்சய் சம்பத், தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், காங்கிரஸ் கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்பு என்ன என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இப்போது எழத் தொடங்கியுள்ளன. இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை பொறுத்தவரை படிப்பில் ஷார்ப்பாக விளங்கியவர். ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில்படித்துப் பட்டங்கள் பெற்ற இவர் முழுக்க முழுக்க பிஸினஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஈரோடுக்கு எப்போதாவது வந்து செல்லக்கூடிய சஞ்சய் சம்பத் குடும்பத்தினருடன் சென்னையில் தான் தங்கியிருக்கிறார்.

2005ல் உறுப்பினர்
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக மட்டும் உள்ள சஞ்சய், தேர்தல் காலங்களில் தனது தந்தைக்கும், அண்ணன் திருமகன் ஈவெராவுக்கும் உதவிக்கரமாக செயல்பட்டிருக்கிறார். இது மட்டுமே அவருக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு ஆகும். மற்றபடி நேரடி அரசியலில் அவர் ஈடுபட்டதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தனது தந்தையின் ஆதரவாளர்களை கூட அதிகம் சந்தித்தது கிடையாது. எல்லாவற்றையும் திருமகன் ஈவெரா மட்டுமே கவனித்து வந்தார்.

தொழிலில் கவனம்
சஞ்சய் சம்பத்தை பொறுத்தவரை தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டவர். இப்படிபட்ட இவருக்கு அரசியல் வாசம் செய்ய வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. திருமகன் ஈவெராவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்ட போதும் அவர் சென்னையிலேயே இருப்பார் ஈரோடுக்கு வர மாட்டார் என்பன போன்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன.

ஈரோட்டில் இறுதிமூச்சு
ஆனால் அவற்றையெல்லம் தவிடுபொடியாக்கும் வகையில் சென்னையை காட்டிலும் அதிகமாக ஈரோட்டில் தங்கியிருந்த திருமகன் ஈவெரா தனது இறுதி மூச்சையும் ஈரோடு மண்ணிலேயே விட்டார். இதனிடையே சஞ்சய் சம்பத் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவரும் தனது அண்ணனை போல் ஈரோட்டில் அதிகமாக தங்கி தொகுதிப் பணிகளை கவனித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications