Ilaiyaraaja: அமுதே தமிழே.. இளையராஜாவுடன் இணைந்து பாடிய கமல்! ரசித்து கேட்ட ஸ்டாலின்.. பாராட்டு விழாவில் சுவாரசியம்
சென்னை: 'சிம்போனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் இளையராஜாவுக்கு (Ilaiyaraaja) இன்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்கள் பாடப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரசித்து கேட்டனர்.
இசைஞானி என்று உலகம் முழுவதும் ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. திரை உலகில் இளையராஜா 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு இந்த பாராட்டு விழாவானது நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

அமுதே தமிழே பாடல்
"சிம்பொனி - சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா - பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கியதும், மேடையில் இசைக்கலைஞர்கள் இளையராஜா பாடல்களை பாடினர். அப்போது கோவில் மண்டபத்தில் இடம் பெற்ற "அமுதே தமிழே" என்ற பாடல் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் உடனிருந்து பாடினார். அப்போது அருகில் இருந்த கமல்ஹாசனும் பாடினார். இதை அருகில் இருந்த முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் ரசித்து கேட்டனர்.
மெய்மறந்து ரசித்த முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து இளையராஜாவின் பாடல்கள் வரிசையாக மேடையில் பாடப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் விருப்பப் பாடல்களும் அரங்கில் ஒலிக்கவிடப்பட்டன. நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைமழையில் நனைந்தபடி நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களும் பாடல்களை மெய்மறந்து ரசித்தனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால், அவர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி
இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். இறுதியில் ஏற்புரை நிகழ்த்துகிறார் இளையராஜா. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் திரைப்படத்துறை செய்து வருகிறது.
"அந்தி மழை பொழிகிறது", "சின்னத்தாயவள் தந்த ராசாவே" போன்ற பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்ட நிலையில், அரங்கில் இருந்தவர்கள் நேரம் போனதே தெரியாமல் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா மற்றும் இன்பநிதி ஆகியோருடன் பங்கேற்றார். கிருத்திகா உதயநிதி மற்றும் இன்பநிதி முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications