Ilayaraja: பாடலின் உரிமையை தயாரிப்பாளரிடம் எப்போதும் நான் வழங்கியது கிடையாது- இளையராஜா திட்டவட்டம்
சென்னை: பாடலின் உரிமையை தயாரிப்பாளரிடம் எப்போதும் நான் வழங்கியது கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் ஒப்புதல் இல்லாமல் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த பாடலின் வடிவத்தை மாற்றி பயன்படுத்தியிருந்தார்கள். அதாவது 'ஒத்த ரூபாய் தாரேன்', 'ஏன் ஜோடி மஞ்சக் குருவி', 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களை பயன்படுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அந்த பாடல்களை அந்த படத்தில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் படத் தயாரிப்பு நிறுவனம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த பாடல்கள் படத்தில் இருந்து நீக்கவில்லை என இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக படத் தயாரிப்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அந்த 3 பாடல்களும் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்ததால் இளையராஜா, சோனி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது படத் தயாரிப்பு குழுவான மைத்ரி மூவி மேக்கர்ஸ், " சோனி மியூசிக்கிலிருந்து பாடல்களுக்கான உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு பாடலுக்கும் சுமார் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்தியிருக்கிறோம்.
இளையராஜாவுக்கும், சோனி மியூசிக்கிற்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. இதனால் 'குட் பேட் அக்லி' படத்தில் பாடல்களை தற்காலிகமாக மாற்றியிருக்கிறோம். எங்களுடைய தரப்பில் இருந்து அனைத்துமே முறைப்படி தான் செய்திருக்கிறோம். அதற்கான வழிமுறைகளையும் சரியாகவே பின்பற்றியிருக்கிறோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா, "பாடலின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது. காப்புரிமை சட்டத்தின் படி பாடலின் உரிமை இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது.
அதிலும் பாடல்களை உருமாற்றம் செய்வது சட்டபடி தவறு என இளையராஜா தெரிவித்திருந்தார். அப்போது தயாரிப்பு நிறுவனம், "பாடல்களை ஓடிடியில் இருந்து நீக்கிவிட்டோம். எனவே இளையராஜா அந்த பாடல்களின் உரிமை அவரிடம் இருந்தால் நிரூபிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications