உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ.. அதே அளவுக்கு எனக்கும்.. தமிழக அரசால் நெகிழ்ச்சி அடைந்த இளையராஜா!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு விழா நடத்தப்படுவது உங்கள் அனைவருக்கும் எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவிக்கு எனக்கும் சந்தோஷம் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளதால், நேரு ஸ்டேடியத்தில் இடம் போதாது என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளைஞானி இளையராஜாவுக்கு சென்னையில் செப்டம்பர் 13ஆம் தேதி பொன் விழா ஆண்டுக்கான பாராட்டு விழா நடக்க உள்ளது. இந்திய சினிமாவில் 1,500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஏராளமான மொழிகளில் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

1975ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டி இருக்கிறது. அண்மையில் சிம்பொனி இசையையும் அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார். இந்தியாவில் இருந்து சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் இளையராஜா தான். ஆசியாவில் இருந்து வேறு யாரும் இந்த சாதனையை செய்ததில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதன்பின் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.
இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து இளையராஜா பேசுகையில், தமிழக அரசு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல்முறையாகும். உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு எனக்கும் சந்தோஷம். எல்லோரும் இதில் கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த அரங்கம் போதாது. மக்கள் அவ்வளவு எதிர்பார்த்து இருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டி தெரிவித்திருந்தார். அதேபோல் சிம்பொனி இசை நிகழ்ச்சி முடிவடைந்த பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். அதன்பின் கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இளையராஜாவை போட்டி போட்டு கொண்டாடுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications