நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
சென்னை: நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதித்து நடக்கக் கூடியவன் என இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ நிறுவனமும் அகி என்ற இசை நிறுவனமும் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகு காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாக ஆட்சேபனை தெரிவித்து இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. இளையராஜாவுக்கு இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது" என 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருக்கிறது என்றும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ (ECHO) நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணையின் போது இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என தன்னை நினைப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது.
அப்போது நீதிபதி மகாதேவன், "இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீட்சிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி ஆகியோர்தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என கூறலாம். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், "காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமைதான் மேலானது என்ற வகையில் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார். மற்றபடி அவர் அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்" என தெரிவித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து வாதங்களை முன் வைக்க வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications