பொன்முடிக்கு புதிய சிக்கல்.. மார்ச் 19ல் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். முதலில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வந்தார்.

அதன்பிறகு பொன்முடியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடியிடம் இருந்து உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வனத்துறை வழங்கப்பட்டது. தற்போது வனத்துறை அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக கடந்த 2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதோடு ரெய்டும் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.
அதில் அமைச்சர் பொன்முடி, கன்புளியன்ஸ் நிறுவனம் அமன் நிர்வாக இயக்குநர் கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மிணரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பொன்முடி, மற்றும் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார். இது அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications