வாரிசு சான்றிதழ் போதும்.. சென்னையில் பல கோடி நிலத்தை எப்படி மோசடியாக பத்திரப்பதிவு செய்கிறார்கள்?
சென்னை: சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் 2 பேருக்கு சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் தயார் செய்தும், அவரது வாரிசு போல் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்தும் நிலத்தை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.
பொதுவாக நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகில் இல்லாமல் வெளியூர்களிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிக்கும் போது, அவர்கள் இறந்துவிட்டது போன்று இறப்பு சான்றிதழ் வாங்குகிறார்கள். அத்துடன் இறந்தவர்களின் வாரிசு என்று கூறி போலியாக வாரிசு சான்றிதழும் வாங்குகிறார்கள்.இப்படி வாங்கும் சான்றிதழ்களை அடிப்படையாக வைத்து,ஆள் இல்லாத நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் மோசடியாளர்கள், அந்த நிலத்தை வேறு ஒருவர் பெயரில் பட்டா வாங்குகிறார்கள். அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு மூன்று நபர்களுக்கு புதிதாக குறுகிய காலத்தில் பத்திரப்பதிவு செய்கிறார்கள்..

இதன் மூலம் குறிப்பிட்ட நிலத்தின் மீது சந்தேகமே இல்லாத அளவிற்கு பட்டாவையும் வாங்கிவிடுவார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் பல வருடம் கழித்தோ அல்லது சில வருடம் கழித்தோ வந்து பார்க்கும் போது, அந்த நிலம் பல கை மாறியிருக்கும்..இந்த மோசடி எப்போது முதல்முறையாக நடந்தது என்று பூர்வீகத்தை தேடி பார்த்தால், இவர் செய்திருப்பது தெரிய வரும். அப்படி தெரியவரும் போது, சில நேரங்களில் நீதிமன்றத்தில் அலைந்து திரிந்து , தங்களுடைய நிலம் என்று நிலத்தின் உரிமையாளர் நிரூபிக்க வேண்டும்.
அவர்கள் வாங்கியது போலியான இறப்பு சான்றிதழ் என்பதை நிரூபிக்க வேண்டும். இதேபோல் மூதாதையர் சொத்துக்களை இன்னும் தங்கள் பெயரில் மாற்றாமல் உள்ளவர்கள் மாற்றிவிடுவது நல்லது. அந்த மூதாதையருக்கு அண்ணன் தம்பி இருந்து, அவர்களின் வாரிசுகள் என்று பொய்யாக கூறி இறப்பு சான்றிதழும், வாரிசு சான்றிதழும் வாங்கிவந்தால், அவர்களும் உங்கள் நிலத்தை சொந்தம் கொண்டாடக்கூடும்.இது பாகப்பிரிவினை பிரிக்கப்படாத நிலங்களில் அடிக்கடி நடக்கும் வில்லங்கமாக இருக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.
சென்னை திருவொற்றியூர், திருநகர், 1-வது தெருவை சேர்ந்த 42 வயதாகும் தமிழ்செல்வன் என்பவர் வல்லூர், லட்சுமி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோடீஸ்வரி (64) என்பவர் இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, அவரது வாரிகள் போல் வேறு 2 பேரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து விச்சூர் கிராமத்தில் உள்ள கோடீஸ்வரிக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக புகார் எழுந்தது.
அதேபோல் மீஞ்சூர் அடுத்த ரமணா நகர் பகுதியை சேர்ந்த தசரதன் என்பவரது மனைவி விஜயலட்சுமி, உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் தயார் செய்து, அவரது வாரிசு போல் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து விஜயலட்சுமிக்கு சொந்தமான ரூ.1 கோடியே 50 லட்சம் லட்சம் மதிப்புள்ள நிலத்தையும் மோசடி செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது,
இதுகுறித்து கோட்டீஸ்வரி மற்றும் தசரதன் இருவரும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications