பிளஸ்-2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்! கல்வித்துறை வெளியிட்ட நம்பர் இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அடுத்தகட்ட முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்துள்ள சூழலில், மாணவர்கள் எந்தவிதமான குழப்பமும் அடையாமல் இருக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் தனது செய்திக் குறிப்பில் அதிகாரப்பூர்வமாகப் பின்வருமாறு நேரடியாகத் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அந்த நேரடி அறிக்கையின் விவரம் இதுதான்: "மார்ச் 2026 மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 8.5.2026 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் விடைத்தாள் நகல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் விடைத்தாள் நகல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை (மார்ச் 2025) - 51720, இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை (மார்ச் 2026) - 67812 ஆகும்.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நகலினை 05.06.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 16.06.2026 (செவ்வாய்க் கிழமை) வரை விடைத்தாள் பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக பார்க்கலாம். முதலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் Higher Secondary Examination என்ற வாசகத்தினை Click செய்யவும். Higher Secondary March 2026 Scan Copy Download என்ற வாசகத்தினை click செய்யவும். அதில் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல்கள் பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக இவ்வியக்ககத்தால் இணையதளத்தில் வெளியிடப்படும். பாட வாரியான விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாட்களின் விவரங்கள் இவ்வலுவலகத்தின் மூலம் அவ்வப்போது செய்திக் குறிப்பாக ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும். மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் தேர்வர்கள் மறுகூட்டல்/ மறுமதிப்பீடு படிவத்தையும் மேற்காண் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். மறுகூட்டல்/ மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 16.06.2026 க்குள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை பணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.505 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305-ம், ஏனையப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 9496383076 அல்லது 9498383076 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்" என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications