கோடிகள் கொட்டுதே.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய ஒப்பந்தங்கள் என்ன? எத்தனை வேலைவாய்ப்புகள்?
சென்னை: தமிழ்நாடு அரசு நடத்தி வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மேற்கொண்டு இருக்கும் முக்கியமான சில முதலீடுகள் என்ன? எவ்வளவு முதலீடு செய்து உள்ளார்கள்? அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.12,082 கோடி முதலீடு செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இதன் தொழிற்சாலை அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த JSW குழு நிறுவனம் - ரூ.10,000 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து இருக்கும் நிலையில் மேலும் கூடுதலாக ரூ.6180 கோடி கூடுதல் முதலீடு செய்து இருக்கிறது. அதேபோன்று அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் என்ற சூர்ய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் ரூ.5,600 கோடியை முதலீடு செய்து உள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் தென் தமிழ்நாடான தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைய இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த TVS குழுமம் ரூ.5000 கோடியை முதலீடு இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடு செய்து இருக்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது. தைவான் நாட்டை சேர்ந்த எலெக்டிரானிக்ஸ் நிறுவனமான பெகட்ரான் ரூ.1,000 கோடி முதலீட்டை தமிழ்நாட்டில் செய்கிறது. இதன் மூலமாக 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த மற்றொரு முன்னணி நிறுவனமான கோத்ரேஜ் தமிழ்நாட்டில் ரூ.515 கோடியை முதலீடு செய்து உள்ளது. செங்கல்பட்டில் இதன் நிறுவனம் அமைய இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்த மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேலும் ரூ.200 கோடி முதலீடு செய்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்த நிறுவனம் செயல்படும். ஆண்டிராய்டு செல்போன்களுக்கான ஸ்னாப்டிராகன் பிராசசரை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனமான குவால்காம் தமிழ்நாட்டில் 177 கோடியை முதலீடு செய்து இருக்கிறது. இதன் மூலம் 1600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications