பட்டா வரலாறு ஆன்லைன் சேவை: நில நிர்வாகத்தில் டிஜிட்டல் புரட்சி தேவை.. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை
சென்னை: தமிழக அரசின் வருவாய்த்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பட்டா வரலாறு' ஆன்லைன் சேவை, நில உரிமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வெளிப்படையாக அறிய உதவும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.. இந்த வரவேற்கத்தக்க திட்டத்தை இன்னும் முழுமையான மற்றும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் நில நிர்வாக புரட்சியாக மாற்ற வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த பல்வேறு முக்கிய அம்சங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது
முதலாவதாக, வரலாற்றுத் தரவு ஒருங்கிணைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.. தற்போதைய நிலையில் 2014 முதல் மட்டுமின்றி, வருவாய்த்துறை துவக்க காலம் முதற்கொண்டு அனைத்து நில உரிமை மாற்றங்களையும், பழைய நிலச் சட்ட விவரங்களையும் இத்தளத்தில் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.. இதன் மூலம் ஒரு நிலத்தின் முழுமையான வரலாற்றை பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி தெரிந்து கொள்ள முடியும்.!

அடுத்ததாக, துறைசார் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.. வருவாய், பதிவு மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்க வேண்டும்.. மேலும், ஜியோ-டேக், ஜி.ஐ.எஸ் வரைபடம் மற்றும் பிளாக்செயின் போன்ற நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நில ஆவணங்களின் நம்பகத்தன்மையை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்த முடியும்..
நில உரிமையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மோசடிகளைத் தவிர்க்க 'பட்டா ஸ்மார்ட் கார்டு' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.. தனித்துவமான அடையாள எண், கியூ-ஆர் கோடு மற்றும் பயோமெட்ரிக் அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தினால், நில மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்கள் முற்றிலும் தடுக்கப்படும்.. தமிழக அரசு இந்த கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுத்தால், இது நில நிர்வாகத்தில் ஒரு மாபெரும் புரட்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை என்று பெயிரா கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications