ஆக்ரோஷம்.. டைரக்டர் ஏஎல் விஜயின் கார் மீது திடீர் தாக்குதல்! அடிக்க பாய்ந்த நபரால் ஷாக்
சென்னை: திரைப்பட இயக்குனர் ஏஎல் விஜய் இன்று சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒருவர் அவரது காரை ஹெல்மெட்டால் தாக்கினார். மேலும் அவர் விஜயை ஹெல்மெட்டால் அடிக்க பாய்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் கிரீடம், ஆர்யாவின் மதராசப்பட்டினம், விக்ரமின் தெய்வத்திருமகள், விஜயின் தலைவா உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் ஏஎல் விஜய். இவர் இன்று டிரைவர், மேனேஜருடன் காரில் சென்னை ஹபிபுல்லா சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்து ஒருவர் பைக்கில் சென்றார். அப்போது காரின் ஓரத்தில் இருக்கும் கண்ணாடி அவரது பைக் மீது உரசியது. இதையடுத்து காரை நிறுத்தி பார்த்தனர். அப்போது ‛அடி ஒன்றும்படவில்லை’ என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து திடீரென்று அந்த நபர் பைக்கில் காரை முந்தி வந்து நிறுத்தினார். இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அந்த நபர் ஹெல்மெட்டை எடுத்து காரின் முன்பகுதியில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏஎல் விஜய் காரில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது கோபமடைந்த அந்த நபர் விஜயை தாக்க முயன்றுள்ளார். மேலும் அவருடன் இருந்து விஜயின் மேனேஜர் மணிவர்மாவையும் தாக்க முயற்சித்தார்.
இதையடுத்து அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த போலீஸ் குடியிருப்பில் இருந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த எண்ணை வைத்து இயக்குனர் விஜய் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் அந்த நபர் பைக்கை எடுத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார். இருப்பினும் சம்பவம் குறித்து இயக்குனர் ஏஎல் விஜய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் ஏஎல் விஜய் கூறுகையில், ‛‛பைக்கில் வந்த நபர் குடிபோதையில் இருந்தார். அவர் ‛ராங் ரூட்டில்’ வந்தார். அவர் எங்களின் காரின் முன்பகுதியில் ஹெல்மெட்டால் தாக்கினார். என்னையும், எனது மேனேஜர் மணிவர்மாவையும் தாக்க முயன்றார். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளோம். மதுபானம் குடிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
அந்த நபர் குடித்துவிட்டு ஓலாவில் சென்று இருக்கலாம். நான் இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் குடிபோதையில் அந்த நபரை எப்படி சமாளித்து இருப்பார். அதனால் தான் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்’’ என்றார்.












Click it and Unblock the Notifications