சென்னையில் இந்த பக்கம் போகாதீங்க.. இரண்டு நாட்களாக வடியாத மழைநீர்! முடங்கி போன போக்குவரத்து
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை நின்ற பின்னர் பல பகுதிகளில் நீர் வடிந்துவிட்டாலும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழை நீர் வடியாமல் தேங்கியிருக்கிறது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் நேற்று முன்தினம் இரவு 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதுபோல நேற்றும் லேசான அளவில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது.

மழை பாதிப்புகளை சரி செய்ய, கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் களமிறங்கினர். சென்னையின் மற்ற பகுதிகளில் மேயர் பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் நேரில் ஆய்வு செய்து தேங்கிய நீர் சரியான முறையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர். பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் மொத்த நீரும் வடிந்துவிட்டது. இருப்பினும் தென் சென்னையின் சில பகுதியில் சில இடங்களில் மழை நீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நின்றது.
குறிப்பாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்க பாதையில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த சுரங்கப்பாதையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. மேலும், கோடம்பாக்கம் அஜீஸ் நகர், சுப்பிரமணிய நகர், கார்பரேசன் காலனி சாலை ஆகிய இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. எனவே இந்த பகுதியில் செல்வோர் சாலையில் இருக்கும் பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
ஏற்கெனவே மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையிலும், தியாகராய நகரிலும் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியாகிய சம்பவம் தேங்கியுள்ள மழை நீர் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. எனவே மழை நீரை விவரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 3ம் தேதி வலுப்பெற்று புயலாக மாற இருக்கிறது. இது 4ம் தேதி சென்னைக்கும், மசூலிப்படினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் மழை மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே பெரு மழைக்கு முன்னர் தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications