என்னதான் ஆச்சு நம்ம சென்னைக்கு..மொத்தமா ஊருக்கு போய்ட்டாங்களா? 45 சதவீதத்தை தாண்டாத வாக்குப் பதிவு.!
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையில் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், மொத்தமாக 200 வார்டுகளிலும் சரசாரியாக சுமார் 45க்கும் குறைவான சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக ஒரு சில சலசலப்புகளுக்கிடையே அமைதியான முறையில் நடைபெற்றது.

சென்னையில் வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்காளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக 100 வயதை கடந்த முதியவர்கள் அதிக அளவில் மாநிலம் முழுவதும் வாக்களிப்பதை காணமுடிந்தது இதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் முதல் வாக்கினை பதிவு செய்தனர். சில இடங்களில் பணப்பட்டுவாடா, முறைகேடு புகார்கள் எழுந்தாலும் மற்றபடி பெரிய அளவிலான புகார் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னையில் மந்தம்
சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 27800க்கும் அதிகமான அதிகாரிகளும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டது. கடந்த 17-ம் தேதி முதல் சென்னையில் மட்டும் 45 பறக்கும்படைகள், மண்டலத்துக்கு 3 குழுக்கள் என்று 15 மண்டலத்துக்கும் 45 குழுக்கள் கூடுதலாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

மிகவும் குறைவு
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் சுமார் 30 லட்சத்து 49 ஆயிரம் ஆண் வாக்காளர்கள்ம் 31 சுமார் 31 லட்சம் பெண் வேட்பாளர்கள், ஆயிரத்து 600 இதரர் என மொத்தம் 61 லட்சத்து 73 ஆயிரம் வாக்களர்கள் உள்ளனர். ஆனால் வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்தியிருந்தனர். அப்போது வாக்கு சதவீதம் 3.99 என இருந்தது.

வெறிச்சோடிய வாக்குச்சாவடி
பதினோரு மணி நிலவரப்படி 17.73 விழுக்காடும் ஒரு மணி நிலவரப்படி 23.42 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாலையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் நினைத்து நிலையில் அப்போதும் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை சென்னையை பொருத்தவரை மொத்தம் உள்ள 200 வார்டுகளிலும் 5 மணி நிலவரப்படி சுமார் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

என்ன காரணம் ?
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்களை சீல் வைத்த பிறகு முழுமையான வாக்கு எண்ணிக்கை தெரிய வரும் என்றாலும் 45 சதவீத வாக்குப்பதிவை சென்னை மாநகரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் வாக்கு பதிவு சதவீதம் குறைந்து இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் சென்னை நகரிலேயே இருப்பவர்கள் கூட வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது இந்த வாக்குப்பதிவின் மூலம் தெளிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications