கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன்... மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறப்பு... இறைநேசர்கள் மகிழ்ச்சி..!
சென்னை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள மத வழிபாட்டுத்தலங்கள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா பரவலால் கடந்த இரண்டு மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கோயில்கள், தேவாலயங்கள், தர்ஹாக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால், இறைநேசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உடல் வெப்பநிலை அளவிட்ட பிறகே மலைக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே இன்று முதல் மின் இழுவை ரயில் மட்டுமே இயக்கப்படும் என்றும் ரோப் கார் சேவை வசதியை நிறுத்தி வைப்பதாகவும் பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஆரோக்ய மாதா அன்னை பேராலயம் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்நாளான இன்றே ஏராளாமானோர் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்ஹா மற்றும் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் தர்ஹாவும் இன்று அதிகாலை தொழுகைக்கு பிறகு திறக்கப்பட்டது. அங்கு சிறப்பு துஆ நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், விராலிமலை முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோயில்களும் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் இருந்தால் வழிபாட்டுத்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications