பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு.. சிறப்பு டிஜிபி, எஸ்.பி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு டி.ஜி.பி ஆஜரானார். , செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது, முதல்வரை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக கூறப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி டிஜிபியிடம் புகார் அளிப்பதற்காக சென்னையில் காரில் சென்றபோது, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் அவரை வழிமறித்து புகார் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியதாவும் கூறப்பட்டது. காவல்துறை வட்டாரத்தில் இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குப்பதிவு
இதற்கிடையே பெண் எஸ்.பி.யைத் தடுத்து மிரட்டியது தொடர்பாக தொடர்பாக எஸ்.பி. கண்ணன் மீது ஐபிசி பிரிவு 354 A (2), 341, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நியாயம் கிடைக்காது
இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி. கண்ணன் இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆஜரானார்கள். இந்த வழக்கு குறித்து சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு அங்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, என் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையைத் தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது'' என்று அவர் கூறி இருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த நிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டி.ஜி.பி.ஆஜராகி உள்ளார். மேலும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications