ஓராண்டில் தமிழ்நாட்டில் 4 லட்சத்து 4,000 பேர் தெருநாய் கடியால் பாதிப்பு! மத்திய அமைச்சர் ஷாக் தகவல்!
சென்னை: நடப்பு ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 4 லட்சத்து 4 ஆயிரம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியும், வேதனையும் கலந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் பகேல் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது மத்திய இணை அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார். இந்தியாவிலேயே தெருநாய் கடியால் அதிகமானோர் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருப்பது வேதனையான தகவலாக பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில் 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 4 லட்சத்து 4 ஆயிரம் பேரும் நடப்பு ஆண்டில் மட்டும் தெருநாய் கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மூன்றரை லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை உயர்ந்து 4 லட்சத்தை தாண்டியிருப்பது அவலமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் என்ன செய்கின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது. ஏதோ தனியார் அமைப்போ, தனி மனிதரோ இந்த தகவலை வெளியிட்டிருந்தால் நம்பத் தேவையில்லை. தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் தெரு நாய் கடிக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர் என நாடாளுமன்றத்திலேயே மத்திய இணை அமைச்சர் கூறியிருக்கிறார். இதனை இதனை தமிழக அரசு மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும், வீதிகளில் விளையாடும் சிறுவர்களையும் தெருநாய்கள் துரத்தி வந்து கடிக்கும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்த வேண்டும். இதனிடையே தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி வரும் புளுகிராஸ் போன்ற தொண்டு அமைப்புகள் தாங்களே முன்வந்து தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கலாம் அல்லது அதற்கென தனி இடத்தை உருவாக்கி அங்கு கொண்டு சென்று பராமரிக்கலாம்.
அதைவிடுத்து அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்காவிட்டால் தெருநாய் கடி பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலத்தை முந்தி தமிழ்நாடு முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications