கள்ளக்குறிச்சி வன்முறை: முதல்வர் ஸ்டாலின், காவல்துறையும் தான் பொறுப்பு.. இபிஸ் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே பள்ளி மாணவி மர்மமரணம் மற்றும் வன்முறைக்கு முதல்வர் ஸ்டாலினின் அரசும், காவல்துறையின் அலட்சியமும் தான் காரணம் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

கள்ளக்குறிச்சி வன்முறை
மேலும் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று பள்ளி முன்பு நடந்த போராட்டம் வன்முறையானது. பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதற்றமான சூழலால் தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
இந்நிலையில் தான் இன்று மாலை சென்னை தனியார் ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் இடைக்கால பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

தாய் புகார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி 3வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் அவரது தாய் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தாய் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

ஆறுதல் கூறாத அரசு
கடந்த 13ம் தேதி இறந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 13ம் தேதிக்கு முன்பாகவே இறந்ததாக தாயார் குற்றம்சாட்டி உள்ளார். இறந்த பிறகு மாணவியின் தாயாரை பள்ளி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல் துறை அல்லது அரசு என யாரும் அவருக்கு ஆறுதல் கூறவில்லை. அவரை துன்புறுத்தியதாக கூறுகிறார். இந்த வேளையில் மகளை இழந்து வாடும் தாய் வேதனை அடைந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும். அவருக்கு இந்த அரசு ஆறுதல் கூறி இருக்க வேண்டும்.

அலட்சியத்தால் தான் வெகுண்டெழுந்தனர்
மர்மமான முறையில் மாணவி இறந்ததாக தாய் சந்தேகம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம்ம சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டு இருக்காது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை அலட்சியத்தால் தாய்க்கு நீதி கிடைக்காததால் தான் குடும்பத்தினர், இளைஞர்கள், உறவினர்கள் கொதித்து வெகுண்டு எழுந்துள்ளனர். இதனால் தான் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

முழு பொறுப்பும் ஸ்டாலின் தான்
இதற்கு முழு பொறுப்பும் முதல்வர் முக ஸ்டாலின் தான். அவர் தலைமையில் தான் இந்த அரசும், காவல் துறையும் இயங்கி வருகிறது. 3 நாளாக மாணவிகள் மர்மமரணம் குறித்து போராடினாலும் அரசு செவிசாய்க்கவில்லை. ஆறுதலுக்கு கூட அதிகாரிகள் யாரும் வந்து பேசவில்லை என மாணவியின் தாய் கூறுகிறரார். இதனால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயலற்ற அரசாங்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது. தமிழகத்தில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் இன்று செயலற்ற அரசாங்கம் உள்ளது. உளவுத்துறை செயல் இழந்துள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த பிரச்சனை எடுத்துள்ளது.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை
இந்த விஷயத்தில் விசாரணை முடிவதற்கு முன்பே காவல் துறை எப்படி தீர்ப்பு கொடுக்க முடியும். விசாரணைக்கு முன்பே பள்ளி நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லை என எப்படி காவல் துறை உயரதிகாரியால் கூற முடியும். இதுபற்றி உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications