மது விற்பனையால் அரசுக்கு வரும் தொகை! வெட்கப்படணும்! கூட்டணிக் கட்சியின் ஆட்சி மீது வேல்முருகன் சாடல்
சென்னை: மதுபான விற்பனை மூலம் வரும் தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும் என வேல்முருகன் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருப்பினும் மதுவிலக்கு விவகாரத்தில் மட்டும் சமரசமின்றி தொடர்ந்து கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் வேல்முருகன். பரந்தூர் விமான நிலையம், என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட இன்னும் பல விவகாரங்களில் திமுக மீது வேல்முருகன் அவ்வப்போது அட்டாக் செய்து வரும் நிலையில் அவரை வளைக்க அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.

தந்தை மது குடிப்பதால் தற்கொலை செய்துகொண்ட விஷ்ணுபிரியா என்ற இளம்பெண்ணின் மரணம் தன்னை உலுக்கிவிட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது;
''வேலூர் மாவட்டம், குடியாத்தம், சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுபிரியா, 10 ஆம் வகுப்பில் 410 மதிப்பெண் பெற்றவர். இவர், தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 04.06.2023 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்வார்கள் அப்படி சொல்லிவிட்டு தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தி வருவது ஏற்புடையதல்ல. மதுவால் மது அருந்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்பது மாணவி விஷ்ணுபிரியாவின் மரணத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
பள்ளி - கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது தான் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சமூகப் போக்கும் கவலை கொள்ள வைத்துள்ளது.
உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி அழித்ததன் காரணமாக வந்தத் தொகையை இழக்கின்றனர். மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடும்பங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததன் மூலம் கிடைத்த தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டிய தருணம் இது.

வரி என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசு கொள்ளை அடித்து செல்லும் பெரும் தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்டாலே, அதில் மது வருமானத்தை விட கூடுதலாக ஈட்டமுடியும். தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள் (ஆவின் நிறுவனம்) விற்பனையை தமிழ்நாடு அரசு விரிவாக்கினால் ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
எனவே, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை கேட்டுப் பெற்று, வருவாய் இழப்பில்லாமல் மதுபானக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். குறிப்பாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் முழு மதுவிலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்போது தான், பல விஷ்ணுபிரியாக்களின் தற்கொலையை நாம் தடுத்து விட முடியும்.''












Click it and Unblock the Notifications