போனுக்கு வரும் IT நோட்டீஸ்.. விடாமல் ஆட்டம் காட்டும் வருமான வரித்துறை.. அதிர்ச்சியில் சம்பளதாரர்கள்!
சென்னை: நாடு முழுக்க வரி செலுத்துவோருக்கு SMS, மின்னஞ்சல் எச்சரிக்கைகளை வருமான வரித்துறை அனுப்பத் தொடங்கி உள்ளது. தவறான கோரிக்கைகளை வாபஸ் பெற்று, வரிக் கணக்குகளைத் திருத்தி அமைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நிதி அமைச்சகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வரி ஏய்ப்புக்காக பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சிகள் (RUPPக்கள்) அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஐடி ஊழியர்கள் சார்பாக சிஏ இடைத்தரகர்கள் தாக்கல் செய்த மோசடியான கோரிக்கைகளுக்கு எதிராக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

வரி செலுத்துவோர் தங்களது ITR-களைப் புதுப்பிக்கவும், தவறான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் திரும்பப் பெறவும் வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு 2025 டிசம்பர் 12 முதல் SMS மற்றும் மின்னஞ்சல் ஆலோசனைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சிகள் நோட்டீஸ்
"பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சிகள் (RUPPக்கள்) அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாகக் கூறி, பெருமளவிலான போலி கோரிக்கைகள் செய்யப்பட்டு, வரி குறைக்கப்பட்டு, போலி ரீஃபண்டுகள் கோரப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது" என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டது. இப்படி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்.. மாறாமல் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த வருடங்களில் தவறான கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரித்துறை நடவடிக்கை: நோட்டீஸ் அனுப்பப்பட்டது
வருமான வரி கணக்குகளில் முறைகேடாக விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
சிலர், சிறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகள் கேட்டு உள்ளனர். இவை கண்டிப்பாக விசாரிக்கப்படும். அதேபோல் சுகாதார காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும் வீட்டுக்கடன் மீதான வட்டி, மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான விலக்குகளும் (பிரிவு 80E, 80EE, 80EEB) இந்த நடவடிக்கையின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இது குறித்து வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.
வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications