செந்தில் பாலாஜி + பொன்முடி + ஜெகத்ரட்சகன் + எ.வ.வேலு தொடரும் ரெய்டு வியூகம்.. திமுகவுக்கு நெருக்கடி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்து தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள், எம்.பிக்களை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்துவதன் மூலம் தமிழக அரசு ஊழல் அரசு என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
சிக்கிய உதவியாளர்: இதை தொடர்ந்து மின்சார துறை தொடர்பாக தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்தனர். செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். மேட்டூர், தூத்துக்குடியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொன்முடி: தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. நில அபகரிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
அதேபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை: அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் சோதனைக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திமுக அமைச்சர்கள் அடுத்தது ரெய்டில் சிக்கியது பரபரப்பாக பேசப்பட்டது.
ஜெகத்ரட்சகன்: அமைச்சர்களைத் தொடர்ந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எ.வ.வேலுவுக்கு குறி: இந்த சூழ்நிலையில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு, கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளன. அப்பாசாமி கட்டுமான குழுமம் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
அரசுக்கு களங்கம்: காசாகிராண்டே கட்டுமான குழுமம் தொடர்புடைய இடங்களிலும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனை எத்தனை நாட்களுக்கு எப்போது முடியும் என்பது யாருக்குமே தெரியாது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பணம் அதிகம் செலவு செய்யும் பசையான அமைச்சர்களையும், எம்.பிக்களையும் குறி வைத்து ரெய்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அரசின் மீது களங்கம் கற்பிக்கவே ரெய்டு நடத்தப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications