ஐடிஆர் தாக்கல் செய்ய போறீங்களா? அவசரம் காட்ட வேண்டாம்! காலக் கெடுவை நீட்டித்த வருமான வரித்துறை
டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு சுமூகம் மற்றும் வசதியான வரி தாக்கல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது
மாதச் சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது வருமான வரி அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக ஐடிஆர், டிடிஎஸ் ஆகியவற்றுக்கான படிவங்கள் வருமானவரி துறையால் வெளியிடப்பட்டது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இ ஃபைலிங் போர்டலும் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஏப்ரல் 16ஆம் தேதி அந்த போர்டல் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இன்னும் அந்தப் போர்டல் திறக்கப்படவில்லை. இதனால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில்," 2025 2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு 2025 2026-க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு மற்றும் தயார் செய்வதற்கான நேரம் மற்றும் வெளியீடு தேவைகளை கருத்தில் கொண்டு வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. வருமான வரி செலுத்துவோருக்கு சுமூகம் மற்றும் வசதியான வரி தாக்கல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது" என வருமான வரித்துறை கூறியுள்ளது.
இந்தாண்டு முதல், ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன்படி, கூடுதலாக 75 ஆயிரம் ரூபாய் கழிவு வழங்கப்படும் நிலையில் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி உச்ச வரம்பாக நியமிக்கப்பட்டு இருக்கிறது. 2023ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
தற்போதைய அறிவிப்பின்படி நான்கு லட்சம் வரை வருமான வரி இல்லை. 4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமான வருபவர்களுக்கு வரியே கிடையாது 4,00,001லிருந்து 8,00,000 வரை 5%, 8,00,001 முதல் 12,00,000 வரை 10%, 12,00,001 முதல் 16,00,000 வரை 15%, 16,00,001 முதல் 20,00,000 20%, 20,00,001 முதல் 24,00,000 வரை 25%, 24,00,000 மேல் 30% வரை வருமான வரி விகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications