சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித் துறை ரெய்டு... சென்னை கடைகளில் அதிகாரிகள் அதிரடி
சென்னை: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய நிறுவனத்திற்கு சொந்தமான 10 -க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை நடைபெறுகிறது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை இன்னும் அதிகாரிகள் விவரிக்கவில்லை.
இந்த நிறுவனம் 1969 ஆம் ஆண்டு பாத்திரக்கடையாக தொடங்கப்பட்டு படிப்படியாக பல்பொருள் அங்காடியாக தமிழகம் முழுவதும் விஸ்தரித்து உள்ளது. இந்த நிறுவனம் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனம் மெல்ல வளர்ந்து தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரிலும் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

குண்டுமணி தங்கம்
5 மாடிகளுக்கு மேல் கொண்டுள்ள இந்த கடையில் குண்டூசி முதல் குண்டுமணி நகை வரை அனைத்தும் கிடைக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கடைகளில் லட்சக்கணக்கானோர் வருகை தருவர். அது போல் சனி, ஞாயிறுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.

திருமணம்
இந்த கடையில் நுழைந்துவிட்டால் போதும் திருமணம், புது வீடு உள்ளிட்டவைகளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிடலாம். விலையும் சற்று குறைவாக இருக்கும் என்பதால் இங்கு மக்கள் குழுமுகிறார்கள். இந்த கடையை போல் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகியவை உள்ளன. இவற்றை சகோதரர்களின் குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.

அதிகாரிகள்
இந்த நிலையில் இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்னம் ஆகியவற்றின் சென்னை கிளைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலையில் உள்ளே சென்ற அதிகாரிகள் இன்னும் வெளியே வரவில்லை. வரி ஏய்ப்பு கணக்கில் வராத முதலீடு உள்ளிட்டவை காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. 10 இடங்களுக்கு மேல் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கடைக்குள் எந்த ஊழியர்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இன்று முடியாது என தெரிகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

ரூ 434 கோடி வரி ஏய்ப்பு?
2019 ஆம் ஆண்டு ஏற்கெனவே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக ரெய்டு நடந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தி நகர், பாடி உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ரூ 434 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்டவை கணக்கில் வராத பணம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் கடைகளில் ரெய்டு நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications