ஓவர்.. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நிறைவு! பெரிய பெட்டியில் அள்ளி சென்ற அதிகாரிகள்!
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம், நகைகள் முக்கிய ஆவணங்களை பெரிய பெட்டியில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் என பல தொழில்களை நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், அவரது மகள், மருமகள், உறவினர்கள் தொடர்புடைய இடங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், மதுபான ஆலைகள், வீடுகள், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. ஜெகத்ரட்சகனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கார்கள் என ஒன்றுவிடாமல் வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 2 பைகளில் கணக்கில் வராத பல கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீட்டுக்கு பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு சென்று அதிகாரிகள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து கட்டுக்காட்டாக பணம், வெளிநாட்டு கரன்சிகள், பல கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் உள்ள கணினி, லேப்டாப்களில் தொழில்நுட்ப உதவியுடன் தடயவியல் ஆய்வையும் நடத்தினர். குறிப்பாக மருத்துவமனை, கல்லூரி அலுவலகங்கள் ஆகியவற்றில் மென்பொருட்கள் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை மறைத்து வைத்திருக்கிறார்களா என்ற சோதனையும் நடைபெற்றது. மேலும் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கணக்குகள் வழக்குகள் உள்ளதா என்றும் தீவிரமாக சோதனை நடைபெற்றது.
டெல்லியில் இருந்து வருமான வரித் துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டிருந்தார். சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுக் கைக்கடிகாரங்களின் மதிப்பு 2.45 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் ரெய்டு முடிந்துவிட்ட நிலையில் சில இடங்களில் மட்டும் இன்று காலை வரை ரெய்டு தொடர்ந்தது.
இந்நிலையில், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ரொக்க பணம், நகைகள் முக்கிய ஆவணங்களை பெரிய பெட்டியில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். விரைவில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறை விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications