தியாகிகள் பென்ஷன் உயர்வு! ராணுவ வீரர்களுக்கும் முத்தான அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்! என்ன பயன்கள்?
சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை ரூ 21 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி அவர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவிட்டு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
நாடு முழுவதும் 78 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் தனது உரையில் தாய்நாட்டிற்காக தங்களது இளம் பயதை ராணுவ பணியில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்வதோடு கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமு்ம, 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.
மேலும் அடுத்த இரு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் திட்டங்களுக்கு ரூ 120 கோடி முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாய் இனி 11, 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழகத்தில் நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏற்காடு மற்றும் ஏலகிரி உள்ளடக்கிய மலை பகுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்படக் கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வனத்துறை புவிசார் அறிவியல் துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, பல்லதுறை வல்லுநர்களை கொண்ட குழுவினரால் விரிவான ஆய்வு மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும். மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவுர்ப்பதற்கும், தனிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆக.15-ம் தேதி முதல், ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அது போல் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கி வந்த ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் தியாகிகளுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications