படுமோசமான நிலையில் இந்திய ஐடி ஊழியர்கள்! எந்த துறைக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்! வெளியான லிஸ்ட்
சென்னை: பொருளாதாரச் சூழல், வளர்ச்சி குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தரப்பினருக்கும் ஊதிய உயர்வு என்பது குறைந்து வருவதாகப் புகார்கள் உள்ளன. இதற்கிடையே இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் எந்தளவுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.. எந்தத் துறைக்கு அதிகபட்ச ஊதிய உயர்வு கிடைக்கும்.. யாருக்குக் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை Aon என்ற நிறுவனம் பகிர்ந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதாரம் சீராக இல்லை. பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் பலரும் தங்களுக்கு முன்பு போலச் சம்பள உயர்வு கிடைப்பதில்லை எனச் சொல்லி நாம கேட்டிருப்போம். அது ஓரளவுக்கு உண்மையும்கூட..! அதேநேரம் எல்லாத் துறைகளும் இதனால் ஒரே போல பாதிக்கப்படுவதில்லை. சில துறைகளில் ஊதிய உயர்வு சராசரியை விட அதிகமாகவே இருக்கிறது.

எந்தளவுக்குச் சம்பள உயர்வு?
இந்தச் சூழலில் தான் Aon என்ற நிறுவனம் 2026ல் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு எந்தளவுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும் என்பது குறித்த சர்வேயை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பாண்டை விட அடுத்தாண்டு இந்திய ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு சற்று அதிகமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி சம்பள உயர்வு
சர்வதேச அளவில் கிடைக்கும் சம்பள உயர்வைக் காட்டிலும் இந்தியாவில் சம்பள உயர்வு சற்று அதிகமாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து 2025-26ஆம் ஆண்டுக்கான வருடாந்திரச் சம்பள உயர்வு மற்றும் பணி விலகல் ஆய்வு அறிக்கையை Aon நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2026ஆம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு சுமார் 9%ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது நடப்பாண்டில் இந்தியர்களுக்குக் கிடைத்த சராசரி சம்பள உயர்வான 8.9%ஐ விடச் சற்று அதிகமாகும்.
மறுபுறம் தானாக முன்வந்து வேலையை விட்டு விலகுபவர்களின் எண்ணிக்கை 2024இல் 17.7% ஆக இருந்தது. இது 2025இல் 17.1% ஆக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் 2026இல் ஆள் எடுப்பது மற்றும் சம்பள உயர்வுகளை மறுசீரமைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட 8.9% சராசரி சம்பள உயர்வைக் காட்டிலும் சற்று அதிகமாக அடுத்தாண்டு 9% சம்பள உயர்வு கொடுக்கப்படலாம்.
யாருக்கு அதிகம்
ரியல் எஸ்டேட் துறையில் இருப்போருக்கே அதிகபட்ச சம்பள உயர்வு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகபட்சமாக 10.9% சம்பள உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்பிஎஃப்சி எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு 10% வரை சம்பள உயர்வு கிடைக்குமாம். தொடர்ந்து இஞ்சினியரிங் டிசைன் பிரிவில் வேலை செய்வோருக்கு 9.7% வரை ஊதிய உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
துறை வாரியான தகவல்
- ஐடி சேவைகள்- 6.8%
- வங்கித் துறை (Banking)- 8.6%
- ரசாயனங்கள் (Chemicals)- 8.8%
- FMCG (சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்)- 9.1%
- மின்னணு வர்த்தகம் -9.2%
- மின்னணு உற்பத்தி - 9.2%
- டெக் பொருட்கள் (Tech Products)- 9.4%
- சர்வதேச திறன் மையங்கள் (GCCs)- 9.5%
- ஆடோமொபைல் துறை - 9.6%
- லைஃப் சயின்ஸ்- 9.6%
- சில்லறை வர்த்தகம்- 9.6%
- இஞ்சினியரிங் டிசைன் - 9.7%
- வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs)- 10.0%
- ரியல் எஸ்டேட்- 10.9%
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 10 ஆண்டுகளாகச் சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்த ஐடி துறையில் தான் குறைந்த சம்பள உயர்வு கிடைக்கிறது. மறுபுறம் ஆடோமொபைல், சில்லறை வர்த்தகம், இஞ்சினியரிங் டிசைன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் சம்பள உயர்வு அதிகமாகவே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications