தங்க இறக்குமதிக்கு செக் வைத்து மத்திய அரசு.. தங்கம் விலை உயர 10 பொருத்தமும் பக்காவா இருக்கு!
சென்னை: இந்திய வங்கிகள் ஏப்ரல் 1 முதல் தங்கம் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ஒரு முக்கிய அறிவிப்புக்காக வங்கிகள் காத்திருக்கின்றன. இது நாட்டின் தங்க வர்த்தகத்தை பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் லிலை 154 ரூபாய் குறைந்து 1,53,280 ரூபாயாக உள்ளது, இதுவே 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் குறைந்து 1,40,500 ரூபாயாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை பல தடுமாற்றங்களுக்கு பின்பு வெறும் 0.36 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. சரி வங்கிகளுக்கு என்ன பிரச்சனை?

IGST வரி பிரச்சனை
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அறிவிப்பு மூலம், தங்கம் இறக்குமதி செய்யும் வங்கிகளுக்கு இன்டிகிரேட்டட் ஜிஎஸ்டி (IGST) வரி தள்ளுபடி செய்யப்படும். இந்த முறை 2027ஆம் நிதியாண்டுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், ஜேபி மார்கன், யூபிஎஸ், ஸ்டான்சார்ட் உள்ளிட்ட சர்வதேச வங்கிகளிடம் இருந்து தங்கம் வாங்கும் 12க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகள் இறக்குமதியை நிறுத்தியுள்ளன.
இந்த நடைமுறை கிட்டத்தட்ட 10 வருடமாக வரி விதிப்பில் தளர்வு நடைமுறையில் உள்ளது. தற்போது மத்திய நிதியமைச்சகம் ஐஜிஎஸ்டி வரி குறித்து வங்கிகளுக்கும், சுங்க துறைக்கும் சரியான விளக்கம் கொடுக்காத நிலையில் மொத்த தங்கமும் சுங்க துறையிடம் சிக்கியுள்ளது. இதனால் ரீடைல் சந்தைக்குள் புதிய தங்கம் நுழைய முடியாமல் சக்கியுள்ளது.
வங்கிகளின் பங்கு மற்றும் வரி முறை
இந்தியாவில் ஆண்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 டன் தங்கத்தில் 40 சதவீதத்தை ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அங்கீகரித்த வங்கிகள் தான் இந்தியாவுக்கு கொண்டு வந்து விநியோகம் செய்யும் பொறுப்பை கொண்டு உள்ளது.
IGST தள்ளுபடி கிடைத்ததால், வங்கிகள் நகைக்கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டியை வசூலித்து செலுத்துகின்றன. அறிவிப்பு வராததால், வங்கிகள் IGST செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொறுப்பை வங்கிகள் ஏற்கவில்லை, இதேபோல் வங்கி இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு மட்டும் தான் சலுகை உண்டு, மற்ற பொருட்களுக்கு, இறக்குமதி வர்த்தகத்திற்கு ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
வர்த்தகத்துக்கு பாதிப்பு
இந்த தாமதம் தங்க வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி நகைக்கடை சங்கம் வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளித்தது. அரசால் நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலம் தங்கம் கிடைக்காததால் ஏற்றுமதி ஆர்டர்கள் தாமதமாகின்றன என்று தெரிவித்தது. வெள்ளி இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. RBI ஏப்ரல் 6-ம் தேதி 17 வங்கிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தாமதத்துக்கு என்ன காரணம்?
அறிவிப்பு தாமதத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சிலர் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதாகவும். இதன் மூலம் தங்க இறக்குமதியை குறைக்க அரசு விரும்புகிறது என்று ஊகிக்கின்றனர். கிஃப்ட் சிட்டி புல்லியன் எக்ஸ்சேஞ்ச் மூலம் இறக்குமதி செய்ய வங்கிகளை ஊக்குவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வங்கிகள் தற்போதைய எளிதான முறையை தொடர விரும்புகின்றன.
2026ஆம் நிதியாண்டில் தங்க இறக்குமதி மதிப்பு 24 சதவீதம் உயர்ந்து 71.98 பில்லியன் டாலராக புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால் எடை அளவில் 4.7 சதவீதம் குறைந்து 721 டன் ஆக இருந்தது. இந்த தாமதம் தொடர்ந்தால், நகைத் தொழில் மற்றும் ஏற்றுமதியில் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதோடு ரீடைல் சந்தையில் தங்கம் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் அச்சமும் உள்ளது.












Click it and Unblock the Notifications