சூடு சுரணை இருந்தா இந்த கூட்டணியில் இனியும் இருப்பார்களா? நிதிஷ் பேச்சு விவகாரத்தில் விளாசும் பாஜக!
சென்னை: பீகார் சட்டசபையில் பெண்கள் குறித்து கேவலமாக பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என பாஜக நாராயணன் விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2. 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. விரைவில் அது 2ஆக குறையும் என்றார். மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருப்பதே காரணம்.

கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண்கள் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவார்கள். இதுபோன்று, பேசியபோது சில சைகைகளையும் அவர் காட்டினார். இது அவையில் இருந்த பெண்களை முகம் சுழிக்கச் செய்தது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் பேச்சு தரக்குறைவானதாக கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து மன்னிப்புக் கோரினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்கள் நிதிஷ் குமாரின் இந்தப் பேச்சை குறிப்பிட்டு 'இந்தியா' கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நிதிஷ் குமாரையும், அவரது பேச்சைக் கண்டிக்காத இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது. கேவலமாகப் பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. நிதிஷ் குமார் இனி அரசியலில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.
உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும், அதை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று சைகைகளோடு நக்கலாக, சிரித்து கொண்டே சட்டசபையில் பேசிய விவகாரத்தை கண்டிக்காத எந்த கட்சியும் அரசியலில் இருக்க தகுதியற்ற கட்சிகளாகவே கருதப்படும். 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டிய விவகாரம் இது.
திராவிட முன்னேற்ற கழகம் நிதிஷ் குமார் பேசியதை ஆதரிக்கிறதா? மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், பெண்களை இழிவாகப் பேசியுள்ள 'இந்தியா' கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்?
காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இனியும் அந்த கூட்டணியில் இருக்குமா? வாய் கிழிய கிழியப் பேசும் கம்யூனிஸ்டுகள் இந்த விவகாரத்தில் வாயடைத்துப் போயுள்ளது ஏன்? ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி, மானபங்கப் படுத்திய நபரை கண்டிக்காதவர்கள் மக்கள் தலைவர்களா?" என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நேற்று மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்காக அவர் வெட்கப்படவே இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் கூட பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படிப்பட்ட பார்வை கொண்டவர்கள், உங்கள் மரியாதையை எப்படிக் காப்பாற்றுவார்கள்? அவர்கள் எந்த அளவுக்கு தாழ்ந்து போவார்கள என்பது இதில் இருந்து தெரிகிறது." என கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications