வாக்கு திருட்டு புகார்.. தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் குளறுபடி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் பாஜகவோடு கூட்டு வைத்து மோசடி செய்வதாகவும், தொடர்ந்து ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வந்தார். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி தலைமையில் 25 கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்றனர்.
அப்போது தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே அவர்கள் போலீசாரால் தடுத்த நிறுத்தப்பட்டனர். போலீசாரும் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான் சூழல் நிலவி வருகிறது.

தடுத்து நிறுத்தப்பட்ட எம்பிக்கள்
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், கனிமொழி, சரத் பவார் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். வாக்கு திருட்டு என்ற பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக செல்றனர். வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 30 எம்பிக்கள் மட்டுமே தேர்தல் ஆணைய அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் பேரணியாக தேர்தல் ஆணையம் நோக்கி வந்த எம்பிக்கள் 300 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து 30 பேர் யார் என்று முடிவு செய்து அவர்கள் மட்டும் தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு அளிக்க உள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்பிக்கள் வாக்கு திருட்டு தொடர்பாக ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறார்கள்.

நாடாளுமன்றம் டூ தேர்தல் ஆணையம் வரை
காங்கிரஸ் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பேட்டியளித்த ராகுல் காந்தி, "கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். போலி வாக்காளர் பட்டியல், வேறு வேறு குடும்பத்தினருக்கு ஒரே முகவரி போன்ற முறைகேடுகளாலே பாஜக வெற்றி பெற்றது.
வாக்காளர் பட்டியலில் இல்லாத முகவரிகளில் பலரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவோடு கூட்டு வைத்து மோசடி செய்வதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சியினர் சுமார் 300 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் அலுவலகம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டனர்.
300 எம்பிக்கள் பேரணி
அதன்படி ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை 11.45 மணியளவில் 25 கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் பேரணியாக சென்றனர். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், கனிமொழி, சரத் பவார் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். வாக்கு திருட்டு என்ற பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக செல்கின்றனர்.
தலைமை தேர்தல் ஆணையரிடம் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளனர். இதேபோன்று ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறுகையில், "வாக்குகள் திருடப்படுவது, ஒரு நபர் - ஒரு ஓட்டு என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது" என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று தமிழகம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் ஆணையத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications