11,00,00,00,00,000 ரூபாய் போச்சு.. 13,00,00,00,00,000 வந்தாச்சு! பங்கு சந்தையை புரட்டி போட்ட டீலிங்!
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதே நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. 1500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு காரணமாக பங்குச் சந்தையில் மிகப் பெரிய பாய்ச்சல் உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளனர் முதலீட்டாளர்கள்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-2027 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பங்குச் சந்தை வட்டாரங்களில் கலவையான எதிர்பார்ப்புகள் நிலவின.
சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையும், சில கடுமையான முடிவுகள் வரலாம் என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடையே இருந்தது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அந்த எதிர்பார்ப்புகள் பெரும் அதிர்ச்சியாக மாறியது.

இந்திய பங்குச் சந்தை
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, அன்றைய தினம் பங்குச் சந்தை இயங்கும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்ஜெட் உரை முடிந்த சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. அப்போது நிதியமைச்சர், பங்கு பரிவர்த்தனை வரி எனப்படும் எஸ்டிடி (STT) உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பே சந்தையின் மனநிலையை முற்றிலும் மாற்றியது.
சென்செக்ஸ் சரிவு
இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டுமே கடும் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் ஒரே நாளில் 1,546 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,722 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல் நிப்டி குறியீட்டெண் 495 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,825 புள்ளிகளில் முடிந்தது. இந்த திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது. பட்ஜெட் நாளிலேயே இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது சந்தை வரலாற்றில் அரிதான நிகழ்வாக பார்க்கப்பட்டது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
இந்த நிலையில், சில நாட்களுக்குள் பங்குச் சந்தையின் போக்கு மீண்டும் திடீரென மாறியது. இந்தியா மீது அமெரிக்கா விதித்து வந்த வர்த்தக வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய பங்குச் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. இதன் எதிரொலியாக, மறுநாள் காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத அளவில் ஏற்றம் பதிவானது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடக்கத்தில் மட்டும் 4,200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 85,872 புள்ளிகளை எட்டியது.
நிப்டி ஏற்றம்
பின்னர் சிறிது சரிந்தாலும், நாள் முடிவில் 2,073 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல் நிப்டி குறியீட்டெண் 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் கண்டது. வர்த்தக இறுதியில் நிப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளில் முடிந்தது. இது சுமார் 2.55 சதவீத உயர்வாகும். இந்த நாளில் பெரும்பாலான பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
நிப்டி-50 பட்டியல்
குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகளும் நல்ல ஏற்றத்தை பதிவு செய்தன. ஜவுளி, தோல், ஜெம் அண்டு ஜுவல்லரி, கடல் உணவு ஏற்றுமதி, சிறப்பு ரசாயனம் தொடர்பான நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன. நிப்டி-50 பட்டியலில் இடம்பெற்ற அதானி என்டர்பிரைசஸ் பங்கு 10.5 சதவீதம் உயர்ந்தது. அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், இண்டிகோ போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான உயர்வை கண்டன. சில தொழில்நுட்ப நிறுவன பங்குகள் மட்டும் லேசான சரிவுடன் முடிந்தன.
இந்தியா-அமெரிக்கா
இந்த வர்த்தக உயர்வின் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடி அதிகரித்தது. பட்ஜெட் காரணமாக ஏற்பட்ட இழப்பை விட அதிகமான லாபம் ஒரே நாளில் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், வலுப்பெறும் இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக வரும் நாட்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications