உச்சத்தில் வெங்காயம் விலை.. 2024 மார்ச் வரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
சென்னை: 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை. மக்களின் அன்றாட சமையலில் அவசியம் பயன்படுத்தப்படும் பொருள் வெங்காயம்.
கடந்த பல மாதங்களாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்தது. இதனையடுத்து வெங்காயம் விலை மேலும் உயர்ந்துள்ளது. வெங்காயம் விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் விலையானது குறைந்தபாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications