கையிருப்பில் 25,000 டன் தங்கம்.. உலகின் டாப் 10 மத்திய வங்கிகளை பின்னுக்கு தள்ளிய நம் மக்கள்! டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வந்தாலும் கூட அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இப்படி தங்கத்தின் மீதான மோகம் நம் மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி உள்பட உலகின் ‛டாப்' 10 மத்திய வங்கிகளின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மொத்த அளவை காட்டிலும் நம் நாட்டு மக்களிடம் அதிக தங்கம் உள்ளது. நம் நாட்டு மக்களிடம் உள்ள தங்கம், ‛டாப்' 10 மத்திய வங்கிகளிடம் உள்ள தங்கத்தின் அளவு குறித்த முழுவிவரத்தை இங்கே பார்க்கலாம்.

நாடுகள் இடையேயான போர், தொடர்ந்து அதிகரிக்கும் மோதல், பதற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கத்தின் விலை என்பது ரூ.66 ஆயிரத்தையும், ஒருகிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்தையும் கடந்து விற்பனையாகி வருகிறது.

gold gold price

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. இதனால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் முந்தைய நாள் விலையில் நேற்று விற்பனையானது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8360க்கும், ஒரு சவரன் ரூ.66,800க்கும் விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9120க்கும் விற்பனையானது.

இப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றாலும் கூட மக்கள் அதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தங்கம் நம் நாட்டு மக்களின் முக்கிய ஆபரணமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தங்கம் நம்நாட்டு பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தங்கம் என்பது சிறந்த முதலீடாகவும், கஷ்ட காலங்களில் தங்கத்தை வைத்து எளிதில் பணம் பெற்று கொள்ளலாம் என்பதாலும் இந்த ‛மஞ்சள் மெட்டல்' மீதான ஈர்ப்பு இன்னும் மங்காமல் உள்ளது. இதனால் தான் விலை தொடர்ந்து எகிறி அடித்தாலும் கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள்.

இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டு மக்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு என்பது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட ‛டாப் 10' உலக வங்கிகளின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விட அதிகமாகி உள்ளது. இதுபற்றி ‛எச்எஸ்பிசி குளோபல்' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள குடும்பங்களில் தங்கத்தின் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் உள்ள மக்களின் கையிருப்பு தங்கத்தின் அளவு என்பது சுமார் 25,000 டன்னாக இருக்கலாம். இது உலகின் ‛டாப் 10' மத்திய வங்கிகளில் இருக்கும் கையிருப்பு தங்கத்தின் மொத்த அளவை விட அதிகமாகும்.

2024 டிசம்பர் மாத நிலவரப்படி அமெரிக்க மத்திய வங்கியில் 8,133 டன் தங்கம் கையிருப்பு இருந்தது. இதற்கு அடுத்ததாக ஜெர்மனி மத்திய வங்கியில் 3,300 டன், இத்தாலி மத்திய வங்கியில் 2,452 டன், பிரான்ஸ் மத்திய வங்கியில் 2,437 டன், ரஷ்யா மத்திய வங்கியில் 2,332 டன், சீனா மத்திய வங்கியில் 2,280 டன், சுவிட்சர்லாந்து மத்திய வங்கியில் 1,040 டன், நம் நாட்டின் ரிசர்வ் வங்கியில் 876 டன், ஜப்பான் மத்திய வங்கியில் 846 டன், துருக்கி மத்திய வங்கியில் 615 டன் தங்கம் கையிருப்பு இருந்தது. இந்த 10 மத்திய வங்கிகளில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை கூட்டிப்பார்த்தால் மொத்தம் 24,311 டன் வரும். ஆனால் நம் நாட்டின் மக்களிடம் மட்டும் 25,000 டன் தங்கம் உள்ளது. இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, இந்தியா, ஜப்பான், துருக்கி ஆகிய 10 நாடுகளுடைய மத்திய வங்கிகளின் இருப்பை காட்டிலும் அதிகமாகும்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. தங்கத்தின் மீதான முதலீடு தான் பாதுகாப்பு என்று பல நாடுகளும், மக்களும் நினைக்கின்றனர். இப்படியான சூழலில் நம் நாட்டில் உள்ள மக்களிடம் அதிக தங்கம் இருப்பது நல்ல விஷயமாகும். இது தங்கம் வைத்திருக்கும் ஒவ்வொருவரின் பொருளாதாரத்துக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.

இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை கூறலாம். அதாவது தங்கத்தை வாங்கி குவித்ததன் மூலம் நம் நாட்டு மக்களின் சொத்து மதிப்பு என்பது கடந்த ஓராண்டில் மட்டும் 750 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி செபியில் பதிவு செய்யப்பட்ட ரிசர்ஜ் அனலிஸ்ட் ஏகே மந்தன் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதில், ‛‛அமெரிக்கா உள்பட டாப் 10 மத்திய வங்கிகளின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் கூட்டுத்தொகை என்பது நம் நாட்டு மக்களிடம் இருக்கும் மொத்த தங்கத்தின் அளவை விட குறைவாக உள்ளது. மேலும் தற்போது தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தங்கம் வைத்திருக்கும் மக்களின் சொத்து மதிப்பை உயர்த்துகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் மூலம் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு என்பது 750 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+