வந்தே பாரத் ரயிலை விடுங்க.. குறைந்த கட்டணத்தில் வரப்போகும் புது அதிவேக ரயில்.. அதுவும் இந்த ஆண்டே
சென்னை: வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் இருந்தாலும் கட்டணம் கொஞ்சம் காஸ்ட்லியாக இருப்பது அந்த ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு சற்று தயக்கத்தை கொடுக்கிறது. இதனை கணக்கில் கொண்டு சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில் அசத்தலான வசதிகளுடன் கூடிய புதிய ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்ப்பது ரயில்வேதான். நாடு முழுவதும் தினமும் சுமார் 10 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிகள் ரயில்கள் மட்டும் 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

ரயில் நிலையங்களை புனரமைப்பது, ரயில்களை மேம்படுத்துவது என தொடர்ச்சியாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் கூட இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மலிவு விலை கட்டணம்: வேகமாக செல்லும் திறன், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டதாக இருக்கும் இந்த ரயில்கள். மேலும் இந்த ரயில்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. என்னதான், வந்தே பாரத் ரயிலிலும் பல்வேறு சொகுசு வசதிகள் இருந்தாலும் அவற்றின் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதால் பயணிகள் தரப்பில் ஆதங்கமும் உள்ளது. ஏனெனில் ரயில்களில் அதிகம் பயணிப்பது குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான்.
வந்தே பாரத் ரயிலின் கட்டணம் இத்தகைய பயணிகளுக்கு சற்று அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தது . இந்த நிலையில், சாமானிய பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மலிவு விலை கட்டணத்துடன் கூடிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த ரயில் வந்தேபாரத் ரயிலுக்கு நிகரான வசதிகளை கொண்டு இருக்கும்.
புஷ் - புல் டிரெயின்: தற்போது புஷ் - புல் டிரெயின் (push-pull train) என்று சொல்லப்படும் இந்த ரயில் மணிக்கு 130 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்லும் ஸ்லீப்பர் வசதி கொண்ட கோச்கள் மற்றும் இரண்டாம் வகுப்பு சிட்டிங் பேசேஞ்சர்களுக்கும் சவுகர்யமான வசதிகளை கொடுக்கும் வகையில் இந்த ரயில் விளங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் மேம்படுத்தப்பட்ட டாய்லட் வசதிகள், போதுமான எண்ணிக்கையில் சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெற்றிருக்கும். தற்போது புஷ் - புல் டிரெயின் என்று சொல்லப்படும் இந்த ரயில், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்த பிறகு பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது. இரண்டாம் வகுப்பு சீட்டிங் வசதி கொண்ட கோச்கள் மட்டும் இந்த ரயிலில் 8 இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருபுறமும் என்ஜின்: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இந்த ரயில் அதிக பலனை கொடுக்கக் கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், குறைந்த செலவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இந்த ரயிலில் செல்ல முடியும். ஒவ்வொரு இரண்டாம் வகுப்பு - இருக்கை வசதி கொண்ட பெட்டியிலும் 100 பேர் செல்லும் வசதி இருக்கும். வந்தே பாரத் ரெயிலை போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தாலும் ஏசி வசதி இல்லாததாக இருக்கும்.
சாதாரண கட்டண ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் முன்புறமும், பின்புறமும் என்ஜின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால் இந்த ரயிலை வேகமாக இயக்க முடியும். தற்போது இந்த ரயில் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த ரயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக இரண்டு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications